அபிராமி அந்தாதி: பின்னணி, வரலாறு

 அநேகம் பேருக்கு அபிராமி அந்தாதி பிறந்த கதை ஏற்கனேவே தெரிந்து இருக்கும். 

அபிராம பட்டரின் இயற்பெயர் சுப்ரமணியம். 

18ஆம் நூற்றாண்டில் தஞ்சையை ஆண்ட சரபோஜி (Sarabhoji I Bhonsle: 1712 - 1728) மன்னரின் காலத்தில், மாயவரம் எனப்படும் மயிலாடுதுறை அருகே உள்ள திருக்கடையூரில் வாழ்ந்தவர்.  திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் பஞ்சாங்கம் படிக்கும் பணியைச் செய்து வந்த இவர் மிகவும் தீவிரமான சக்தி உபாசகர். அந்தக் கோவிலில் உள்ள அபிராமி அம்மனை "பாலா திரிபுரசுந்தரி" யாகவே பாவித்து ஸ்ரீவித்யா உபாஸனை செய்து வந்தார்.

ஒரு தை மாத அமாவாசை தினத்தில் சரபோஜி ராஜா அந்தக் கோயிலுக்கு வழிபட வந்த போது, கோயில் பிரகாரத்தில் தியானத்தில் இருந்தார் சுப்ரமணிய பட்டர். பரிவாரம் சூழ ராஜா வருவதைக் கூட கவனிக்காமல் கண்களை மூடி உட்கார்ந்திருந்த அவரைப் பார்த்து ஆச்சரியப்பட்ட ராஜா, அருகில் இருந்தவர்களிடம் "இவர் யார்?" என்று கேட்டார்.  

அவர் கோவிலில் பஞ்சாங்கம் படிப்பவர் என்றும் தேவி உபாசகர் என்றும் ராஜாவிடம் சொன்னார் கோவில் குருக்கள் . 

ஆனால் இவரது நடவடிக்கைகள் பிடிக்காத, இவர் மீது பொறாமை கொண்ட சிலர் ராஜாவிடம் "இவர் ஒரு பைத்தியம்", "துர்த்தேவதைகளை உபாசிப்பவர்", "வாய்க்கு வந்ததை உளறுவார்" என்று சொன்னார்கள். 

இதில் எது உண்மை என்று தானே தெரிந்து கொள்ள விரும்பிய ராஜா, சுப்பிரமணிய பட்டர் தியானம் முடிந்து கண் திறந்து பார்த்ததும் அவரிடம் "இன்றைக்கு என்ன திதி?" என்று கேட்டார். அது வரை கோடி சூரியப் பிரகாசமான அம்பாளின் வடிவத்தை மனதில் நிறுத்தி அந்த ஆனந்த அனுபவத்தில் மூழ்கி இருந்த பட்டர், சட்டென "இன்று பௌர்ணமி திதி " என்று பதில் சொன்னார்.

(பொய் சொன்னதற்காக சரபோஜி ராஜா அவருக்கு மரண தண்டனை அளித்ததாகவும், அன்று இரவு வானத்தில் பௌர்ணமி நிலவு வரவில்லை என்றால் அவரது தலை வெட்டப்படும் என்று சொல்லியதாகவும் சில கதைகள் உள்ளன. "அவரைப் பற்றிக் குறை கூறியது உண்மை என்று கருதிச் சிறிது கோபமடைந்து, "நீர் போய்வரலாம்" என்று சொல்லி அனுப்பிவிட்டார்" ராஜா என்றே கி.வா.ஜ தனது உரையில் குறிப்பிடுகிறார்.  

பெரிய அக்கினிக் குண்டத்தில் நெருப்பு வளர்த்து, அதன் மேலே நூறு கயிறுகள் கொண்ட உறியில்  (பெரிய பாத்திரத்தை உயரத்தில் தொங்க விடுவது) அபிராமி பட்டரை தொங்க விட்டதாகவும், ஒவ்வொரு பாட்டுக்கும் ஒரு கயிறை அறுத்து (இதற்கு அரி கண்டம் என்று பெயராம்) தண்டனையை நிறைவேற்ற ஏற்பாடு செய்யப்பட்டது என்றெல்லாம் திரைப்பட பாணியில் சொல்லப்பட்டும் எழுதப்பட்டும் வருகின்றன. ஆனால் இதற்கு ஆதாரம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.)

78-ஆவது பாடலை பாடும்போது அம்பாள் தன் தாடங்கத்தை (காதில் அணிந்த தோடு) வீசி வானத்தில் பௌர்ணமி நிலவைத் தோன்ற வைத்தாள் என்பது உண்மை. சரபோஜி ராஜா அபிராம பட்டருக்கு செப்புப் பட்டயம் எழுதி நிலம் மற்றும் வீட்டை தானமாகக் கொடுத்த விவரம் அவரது சந்ததியினரால் தெரிய வருகிறது. அவரது சந்ததியினருக்குப் "பாரதி" என்ற பட்டத்தையும் ராஜா வழங்கினார்.

திருக்கடையூரில் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் ஒவ்வொரு வருடமும் தை மாத அமாவாசை நாள் இரவில், தருமபுர ஆதீனம் சார்பில் இந்த நிகழ்ச்சி இன்றும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது.

திருக்கடையூரில் அபிராமி பட்டர் வாழ்ந்த வீடு இன்றும் இருக்கிறது. திருக்கடையூர் மேல் வளாகத் தெருவில் உள்ள மூன்றாவது வீடு அபிராமி பட்டர் வீடு ஆகும். வீட்டின் சுவரில், *'அருளாளர் ஸ்ரீ அபிராமி பட்டர் அவதார இல்லம்.* தோற்றம் 18–ம் நூற்றாண்டு. புதுப்பிக்கப்பட்ட தேதி 16–8–1978’ என்று கல்லில் பொறித்து பதித்திருக்கிறார்கள்.  

இனி, ஒவ்வொரு பாடலாக விரிவாகப் பார்க்கலாம். [இந்த உரை முழுவதிலும் 'பாடல் #' என்பது அபிராமி அந்தாதியின் பாடல் எண் என்றும் 'திருநாமம் #' என்பது லலிதா சஹஸ்ரநாமத்தில் (abbreviated as LS) உள்ள திருநாமத்தின் எண் என்றும் புரிந்து கொள்ளுங்கள்.]

48ஆவது திருநாமம் = மஹா லாவண்ய சேவதி(ஹி): அதாவது அனைத்திலும் பேரழகு பெற்றவள். இதே அர்த்தம் தான் அபிராமி என்ற பெயருக்கும்!


Comments

Popular posts from this blog

அபிராமி அந்தாதி - உரை - அறிமுகம்

அபிராமி அந்தாதி - உரை: காப்பு