அபிராமி அந்தாதி பாடல் #4 - உரை
[உயர் பதவிகள் பெற்றிட] மனிதரும், தேவரும், மாயா முனிவரும், வந்து, சென்னி குனி தரும் சேவடிக் கோமளமே! கொன்றை வார்சடைமேல் பனி தரும் திங்களும், பாம்பும், பகீரதியும் படைத்த புனிதரும் நீயும் என் புந்தி எந்நாளும் பொருந்துகவே. சென்னி = தலை. சிரம். மனிதர்கள், தேவர்கள், முனிவர்கள் அனைவரும் ( குனிந்து ) தலை வணங்கும் ( சேவடி ) சிவந்த அடிகளை உடையவள். #463 வது திருநாமம் "ஸுர நாயிகா": தேவர்களின் தலைவி என்று அர்த்தம். ஈரோடு அருகே சென்னிமலை என்று பிரசித்தி பெற்ற முருகன் கோவில் உள்ளது. இந்த முருகனை "சிரகிரி வேலவன்" என்று (கந்த சஷ்டி கவசத்தில் ) சொல்லுவார் தேவராய ஸ்வாமிகள். சென்னி மலையே சிரகிரி. முனிவர்கள் தங்களின் தவ வலிமையால் பல்வேறு சித்திகளும் வரங்களும் கைவரப் பெற்றவர்கள். அதனால் மாயா முனிவர் என்றார். மாயாத முனிவர், அதாவது இறப்பு என்பது இல்லாத, சிரஞ்சீவியான ரிஷிகள் என்றும் சொல்லலாம். சிவபெருமான் 8 விதமான வீரத் திருவிளையாடல் புரிந்த "அஷ்ட வீரட்டானத் தலங்களில்" ஒன்று திருக்கடையூர். இங்கு தான் மார்க்கண்டேய முனிவரைக் காப்பாற்ற எமனை சம்ஹாரம் செய்து "கால சம்ஹார மூர்த்த...