அபிராமி அந்தாதி பாடல் #4 - உரை

[உயர் பதவிகள் பெற்றிட]

மனிதரும், தேவரும், மாயா முனிவரும், வந்து, சென்னி
குனி தரும் சேவடிக் கோமளமே! கொன்றை வார்சடைமேல்
பனி தரும் திங்களும், பாம்பும், பகீரதியும் படைத்த
புனிதரும் நீயும் என் புந்தி எந்நாளும் பொருந்துகவே. 

சென்னி = தலை. சிரம். மனிதர்கள், தேவர்கள், முனிவர்கள் அனைவரும் (குனிந்து) தலை வணங்கும் (சேவடி) சிவந்த அடிகளை உடையவள்.

#463வது திருநாமம் "ஸுர நாயிகா": தேவர்களின் தலைவி என்று அர்த்தம்.

ஈரோடு அருகே சென்னிமலை என்று பிரசித்தி பெற்ற முருகன் கோவில் உள்ளது. இந்த முருகனை "சிரகிரி வேலவன்" என்று (கந்த சஷ்டி கவசத்தில் ) சொல்லுவார் தேவராய ஸ்வாமிகள். சென்னி மலையே சிரகிரி.

முனிவர்கள் தங்களின் தவ வலிமையால் பல்வேறு சித்திகளும் வரங்களும் கைவரப் பெற்றவர்கள். அதனால் மாயா முனிவர் என்றார். 

மாயாத முனிவர், அதாவது இறப்பு என்பது இல்லாத, சிரஞ்சீவியான ரிஷிகள் என்றும் சொல்லலாம். சிவபெருமான் 8 விதமான வீரத் திருவிளையாடல் புரிந்த "அஷ்ட வீரட்டானத் தலங்களில்" ஒன்று திருக்கடையூர். இங்கு தான் மார்க்கண்டேய முனிவரைக் காப்பாற்ற எமனை சம்ஹாரம் செய்து "கால சம்ஹார மூர்த்தி"யாகச் சிவ பெருமான் எழுந்து அருளி இருக்கிறார். இது பலருக்கும் தெரிந்ததே.

திருக்கடையூரில் சாகாவரம் பெற்ற மார்க்கண்டேய முனிவரையே 'மாயா முனிவர்' என்று இங்கே குறிப்பிடுவதாகக் கூறுகிறார் கி.வா.ஜ.

வீரட்டானத் தலங்கள் 

சிவபிரானுடைய வீரச்செயல்கள் விளங்கிய இடங்களிலுள்ள திருத்தலங்களை வீரட்டானத் தலங்கள் என்று நம்முடைய நூல்கள் சொல்கின்றன. தவறு செய்தவர்களின் வீரத்தை அட்டு ஆன இடம் என்ற அர்த்தத்திலும், இவை எட்டுத் தலங்களாதலால் அட்ட வீரட்டானம் என்றும்  அழைக்கப்படுகிறது. (வட மொழியில் அஷ்ட என்றால் 8. இது தமிழில் அட்ட என்றானது). இவை எட்டுமே தமிழ்நாட்டில் தான் உள்ளன. இந்த எட்டுக் கோவில்களிலும் சிவபெருமானுக்கு "வீரட்டேஸ்வரர்" என்றே பெயர்.

1. திருக்கண்டியூர்: சிவபிரான் பிரமனுடைய தலையைக் கொய்து ஆணவத்தை அடக்கிய தலம். தஞ்சாவூரிலிருந்து திருவையாறு செல்லும் சாலையில் திருவையாறுக்கு மிக அருகில் அமைந்திருக்கிறது.

2. திருக்கோவலூர்/திருக்கோயிலூர்: அந்தகாசுரனைக் கொன்ற இடம். தற்போதைய கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருவண்ணாமலைக்கு அருகே கீழையூர்ப் பகுதியில் உள்ளது. (பழைய குறிப்புகளில் விழுப்புரம் மாவட்டம் என்று இருக்கும்).

3. திருவதிகை: திரிபுரத்தை எரித்த இடம்.  கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகில் அமைந்திருக்கிறது.சைவ சமயக் குரவர்கள் என்று போற்றப்படும் நான்கு பேர்களில் திருநாவுக்கரசர் பிறந்த ஊர் இது.

4. திருப்பறியலூர்: தக்ஷன் தலையைக் கொய்த தலம். திருப்பறியலூரின் தற்போதைய பெயர் பரசலூர். மாயவரம் (எ ) மயிலாடுதுறையிலிருந்து திருக்கடையூர் செல்லும் சாலையில் செம்பொன்னார் கோயில் என்ற ஊருக்கு அருகில் இருக்கிறது.

5. திருவிற்குடி: ஜலந்தராசுரனை வதைத்த தலம். திருவாரூரிலிருந்து நாகூர் செல்லும் சாலையில் உள்ளது விற்குடி என்னும் இந்தக் கிராமம். 

6. திருவழுவூர்: கஜ முகாசுரனைக் கொன்று அவனுடைய யானைத்தோலை உரித்துப் போர்த்துக்கொண்ட தலம். பாடல் #62ல் "வெங்கண் கரி உரி போர்த்த செஞ்சேவகன்" என்று வருவது இதையே குறிக்கும். மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் செல்லும் வழியில் வழுவூர் அமைந்திருக்கிறது. சபரிமலையில் அமர்ந்திருக்கும் ஐயப்பனும் பந்தளராஜாவும் பிறந்த ஊர் இதுதான் என்கிறார்கள். 

7. திருக்குறுக்கை : மன்மதனை எரித்த தலம். மயிலாடுதுறை - மணல்மேடு செல்லும் சாலையில்  கொறுக்கை என்ற ஊருக்குள் அமைந்திருக்கிறது. 

8. திருக்கடவூர்: மார்க்கண்டேயனைக் காப்பாற்ற  எமதர்மனை உதைத்த தலம்.

மனிதரும் தேவரும் முனிவர்களும் வந்து தலை வணங்கி வழிபடும் சிவந்த திருவடிகளை உடையவள் அபிராமி என்கிறார்.

லலிதா சஹஸ்ரநாமத்தில் 64ஆவது திருநாமம்:  தேவர்(ரி)ஷி கண ஸங்காத ஸ்தூய மானாத்ம வைபவா என்பதன் நேரடியான தமிழ் மொழிபெயர்ப்பு இது.

கோமளம் =மென்மை, குருகு; இளமை; அழகு, செவ்வி; கறவைப்பசு; மாணிக்க வகை என்று பல அர்த்தங்கள் உள்ளன.

இங்கே மென்மை என்ற பொருளில் வரும்.

திங்கள் = சந்திரன், நிலா; மாதம்;

திங்கள் என்றால் சந்திரன் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. சுத்தத் தமிழில் திங்கள் என்றால் 'மாதம்' என்று இன்னொரு அர்த்தமும் உள்ளது (ஆண்டாள் அருளிய திருப்பாவை முதல் பாசுரம் "மார்கழித் திங்கள்").

சந்திரனுக்கும் மாதத்துக்கும் ஏன் ஒரே பெயர்? இரண்டுக்கும் என்ன சம்பந்தம்?

அமாவாசை முதல் அடுத்த அமாவாசை வரை (அல்லது ஒரு பௌர்ணமி முதல் அடுத்த பௌர்ணமி வரை) 28 அல்லது 29 நாட்கள் வரும். இது ஏறக்குறைய ஒரு மாதம் ஆகும். எந்தக் காலெண்டரும் கருவியும் இல்லாமல் இரவு ஆகாயத்தைப் பார்த்தே காலத்தைக் கணக்கிடுவதற்கு இது மிகவும் சுலபமான வழி.

ஆங்கிலத்தில் month (மாதம்) என்பதும் Moon என்ற சொல்லில் இருந்து வந்தது தான்! 

பகீரதி = கங்கை நதி. பகீரதனின் அரிய தவத்தால், முயற்சியால் நம் உலகத்துக்குக் கொண்டு வரப்பட்டதால் கங்கை நதிக்கு இந்தப் பெயர்.

பாடல் #21ல் "கங்கை பொங்கு அலை தங்கும் புரிசடையோன்" என்று மீண்டும் வரும்.


சென்னையை அடுத்த மஹாபலிபுரத்தில் உள்ள புகழ் பெற்ற சிற்பங்களில் ஒன்று அர்ஜுனன் தபசு. (பார்க்க: படம்). சில வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் இதை பகீரதன் தவம் என்றும் சொல்கிறார்கள்.

ஸ்ரீ ராமபிரானுடைய முன்னோர்களில் ஒருவர் பகீரதன்.

சூர்ய வம்சம் எனப்படும் இக்ஷ்வாகு குலத்தில் பிறந்த சகரன் என்ற மன்னன் அஸ்வமேத யாகம் செய்த போது, காணாமல் போன யாகக் குதிரையைத் தேடிச் சென்ற அவனுடைய மகன்கள், ராஜகுமாரர் என்ற ஆணவத்தில்  கபில முனிவருடைய ஆஸ்ரமத்தை நாசம் செய்தனர். 

அங்கே தவம் புரிந்த முனிவர் கண்ணைத் திறந்து பார்த்ததில் அவர்கள் அனைவரும் எரிந்து சாம்பல் ஆனார்கள். சகரனுடைய கொள்ளுப் பேரனான பகீரதன் அவர்களுக்கு விமோசனம் கிடைக்க வேண்டித் தவம் செய்து கங்கை நதியை பூலோகத்திற்கு வருமாறு வேண்டினான். ஸ்வர்க்கத்தில் இருந்து இறங்கி வரும்போது தன்னுடைய வேகத்தை  இந்தப் பூமி தாங்காது என்றாள் கங்கா தேவி. பகீரதன் சிவபெருமானை வேண்டி கங்கையை அவரது சடை முடியில் தாங்கி வேகத்தைக் குறைத்துப் பூமியைக் காக்க வேண்டும் என்று வரம் பெற்றான். 

இந்தக் கதை பலருக்கும் தெரிந்திருக்கும். இதனால் தான் மிகவும் கஷ்டமான காரியத்தை செய்து முடிக்கும் முயற்சியை 'பகீரதப் பிரயத்தனம்' என்று சொல்கிறோம். 

கங்கை நதியின் மகத்துவம்:

வட இந்தியாவின் முக்கிய நதிகளில் ஒன்றான கங்கை, நம் நாட்டின் மற்ற பகுதிகளிலும் மிகவும் புனிதம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. பல ஆயிரம் ஆண்டுகளாக, பாரத நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் கங்கா தீர்த்தம் உயர்வாகப் போற்றப்படுகின்றது. சொல்லப்போனால் எல்லா நதிகளும், தீர்த்தங்களுமே கங்கா தீர்த்தம்தான் என்றே இந்துக்கள் நம்புகின்றனர், மதிக்கின்றனர்.

நான்கு வேதங்களிலேயே மிகவும் பழமையானதாகக் கருதப்படும் ரிக் வேதத்தில் 7ஆவது மண்டலத்தில் இந்த நாட்டின் நதிகளைப் போற்றி முக்கியமான ஒரு ஸூக்தம் உள்ளது. 10ஆவது மண்டலத்தில் 'நதி ஸ்துதி ஸூக்தம்' என்றே பிரத்தியேகமாக ஒரு ஸூக்தம் உள்ளது. இதில் நம் நாட்டில் உள்ள நதிகளின் பட்டியலில் முதலில் இருப்பது கங்கை தான்!

ஐப்பசி மாதம் முதல் நாளில் காவேரியில் துலா ஸ்நானம் மிகவும் விசேஷம், பிரபலம். (தமிழ் நாட்டில்) மாயவரம் எனப்படும் மயிலாடுதுறையில் இதற்கென்றே காவிரிக் கரையில் துலா கட்டம் எனும் இடம் இருக்கிறது. மூவுலகிலும் உள்ள எல்லாப் புண்ணிய தீர்த்தங்களும் அன்றைய தினம் காவேரியில் சங்கமிக்கின்றன என்பது ஐதீகம்.

அதே ஐப்பசி மாத அமாவாசை நாளில் நாம் கொண்டாடும் தீபாவளிப் பண்டிகை அன்று ஒவ்வொருவர் வீட்டிலும்  எந்த நீராக இருந்தாலும் அது கங்கை நதி நீராகவே போற்றப்படுகிறது. அதனால் தான் 'கங்கா ஸ்னானம் ஆச்சா?' என்று கேட்கிறோம்.

இப்படி, நாடு முழுவதும் கங்கா தீர்த்தம் என்று போற்றப்படுவதன் காரணம், கங்கை நதி என்பது இமய மலையில் தோன்றி வங்க தேசத்தில் கடலில் கலக்கும் ஒரு சாதாரண ஆறு அல்ல என்பதை விளக்கத் தான். பாரத நாடு எனும் இந்தப் புண்ணிய பூமியின் ஆன்மீக, பண்பாட்டு வாழ்வியலில் மிகப் பழமையான காலம் தொட்டு இன்று வரை எல்லா நதிகளும், தீர்த்தங்களும் புனிதமாகக் கருதப்படுகின்றன. இதன் குறியீடு தான் கங்கா தேவி.

நம் நாட்டு அரசியலில், "தேசிய நீரோட்டம்" என்று புகழ் பெற்ற ஒரு சொல் இருக்கிறது. கங்கை தான் உண்மையில் நம் நாட்டின் தேசிய நீரோட்டம்!

புனிதரும்: லலிதா சஹஸ்ரநாமத்தில் #793ஆவது திருநாமம்:  கபர்தினீ: கபர்தீ எனும் பெயருடைய சிவனின் மனைவி.

கபர்தீ : இயல்பாகவே தூய்மையான கங்கை நீரை தன் சடையில் தாங்கி மேலும் புனிதமானதாக, சுத்தம் ஆக்குபவர் (: நீர் + பூரம்: பிரவாகம் + தை: பரிசுத்தம் செய்வது) 

புரி சடை மேல் புனல் ஏற்ற புனிதன் தான் காண் (அப்பர்-திருநாவுக்கரசர்- தேவாரம்). புனல் = நீர், இங்கே கங்கையைக் குறிக்கும்.

கபர்தினே ச॒ வ்யுப்தகேஸா²ய நம: (ஸ்ரீ ருத்ரம். சிவ அஷ்டோத்தர நாமாவளியிலும் இது வரும்).

புந்தி  = புத்தி  என்பதன் திரிபு: அறிவு, உண்மை எது பொய் எது என்று பிரித்து அறியும் திறன்.  (சோதிட சாஸ்திரத்தில், இவற்றுக்குக் காரகரான புதன் என்பது புந்திக்கு இன்னொரு அர்த்தம். )

பாடல் 1ல் ஏற்கெனெவே சொன்னபடி கொன்றைப் பூவையும், பனியைப்போல குளிர்ச்சியான சந்திரனையும், பாம்பையும், கங்கை நதியையும் தலையில் தாங்கிய சிவபெருமானும், நீயும் எப்போதும் என்னுடைய எண்ணத்தில், நினைவில்  இருக்க வேண்டும் என்று சொல்கிறார்.

அங்கே பாடல் 1ல் சித்தம், இங்கே புத்தி. 

பாடல் 7ல் மதியுறு வேணி மகிழ்நன் என்று மீண்டும் வரும்.

Comments

Popular posts from this blog

அபிராமி அந்தாதி - உரை - அறிமுகம்

அபிராமி அந்தாதி - உரை: காப்பு

அபிராமி அந்தாதி: பின்னணி, வரலாறு