அபிராமி அந்தாதி - உரை - அறிமுகம்
அபிராமி அந்தாதி
ஓம்.
'அபிராமி அந்தாதி' என்ற இந்த நூலை இயற்றியவர் அபிராம பட்டர். 'அபிராமி' என்ற சொல் 'மிக்க அழகுடையவள்' என்று பொருள்படும். எனவே, பேரழகு வாய்ந்த அம்பிகையைப் பற்றிய அந்தாதி என்பது பொருள்.
தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட பலருக்கும் கூட, இது போன்ற உரைநூல்களின் வரிகளைப் படித்து, முழுமையான அர்த்தம் தெரிந்து கொள்ளும் அளவுக்கு, தமிழ் மொழியில் பரிச்சயம், போதுமான அறிவு இல்லை.
தமிழில் உள்ள பக்தி இலக்கியங்களை, பழங்கால புத்தகங்களைப் படித்துப் புரிந்து கொள்ள வேண்டும் என்றால் ஓரளவு சம்ஸ்க்ருதம் (வட மொழி) தெரிந்து இருப்பதும் அவசியமாகிறது. தமிழே "ததிங்கிணத்தோம்" போடுகின்றது என்றால் அதற்கு என்ன செய்வது?
ஆனால் வெறும் வார்த்தைகளுக்கான அர்த்தமும், வரிகளுக்கான விளக்கங்களையும் தாண்டி நுணுக்கமான, ஆழமான ஆன்மீக நுட்பங்களை, அபிராமி அந்தாதியில் சொல்லப்பட்டுள்ள கருத்துக்களின் பின்னணியை, அவற்றின் உள்ளே புதைந்து கிடைக்கும் பொருளை, அனைவரும் புரிந்து கொள்ளக்கூடிய விதத்தில், கூடிய மட்டும் எளிமையான தமிழில் எல்லோருக்கும் புரியும்படி கிடைக்கச் செய்வதே நோக்கம்.
"சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தின் கீழ்" என்று மாணிக்க வாசகர் சிவ புராணத்தில் சொல்வது போல, முழுமையான அர்த்தம் தெரிந்து/உணர்ந்து இது போன்ற பாடல்களை பாடுவது/சொல்லுவது நல்லது.
இந்தப் பாடல்களைப் பாராயணம் செய்பவர்களுக்கும், அடிக்கடி படித்து அம்பாளை வழிபாடு செய்பவர்களுக்கும் இந்த விளக்கங்கள் உதவும்.
'அந்தாதி' என்பது தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்றாகும்.
அந்தாதி என்பதை அந்தம் + ஆதி என்று பிரிக்கலாம். அந்தம் = முடிவு. ஆதி =தொடக்கம். ஒரு பாடலின் முடிவு அடுத்தப் பாடலின் தொடக்கமாக அமையும் செய்யுள் வகைக்கு அந்தாதி என்று பெயர். ஒரு செய்யுளின் இறுதி /கடைசி எழுத்து அல்லது வார்த்தையே அடுத்து வரும் செய்யுளின் ஆதியாய்/ஆரம்பமாய் அமைவது அந்தாதி.
இது நூறு செய்யுட்களால் பாடப்படுவதாகும்.
சக்தி வாய்ந்த மந்திரங்களைக் கொண்டு ஆகம, தந்த்ர நூல்களில் கூறியபடி முறையாக அம்பாளை உபாசனை செய்வது ஸ்ரீ வித்யா உபாசனை எனப்படும். தகுதி வாய்ந்த குரு ஒருவரை ஏற்று, அவரிடம் இருந்து உபதேசம் பெற்று செய்ய வேண்டும். இதற்குப் பல கட்டுப்பாடுகள், நெறிமுறைகள் உள்ளன.
இதற்கு மாற்றாக, நம்மைப் போன்ற லௌகீக மனிதர்களுக்கு இருக்கும் ஒரு மார்க்கம், இன்னொரு மாற்று வழி, அம்பாளைப் பற்றிய ஸ்லோகங்களைப் பாராயணம் செய்வது அல்லது கேட்பது. இந்தக் கலியுகத்தில் பக்தி மார்க்கமே சிறந்தது, எளிமையானது என்று பல சான்றோர்களும் கூறுகின்றனர். ஸம்ஸ்க்ருதத்தில் உள்ள லலிதா ஸஹஸ்ரநாமம், தமிழில் அபிராமி அந்தாதி ஆகியவை பாராயணம் செய்வதற்கு ஏற்றவை, மிகவும் பிரபலம்.
ஸ்ரீ வித்யா உபாசனையில் மிகவும் உயர்வாகப் போற்றப்படும் லலிதா ஸஹஸ்ரநாமத்துக்கு கிட்டத்தட்ட இணையான நூல் அபிராமி அந்தாதியாகும் என்பது என்னுடைய கருத்து.
இந்த விளக்கங்களில் சில விஷயங்கள் உங்களுக்கு ஏற்கெனவே தெரிந்து இருக்கலாம். நான் படித்த மற்ற உரைகளில் இல்லாத (எல்லோருக்கும் தெரிந்தது தானே என்று சொல்லாமல் விடப்பட்ட) கருத்துக்களை இங்கே எழுதி இருக்கிறேன்.
ஆகவே, இந்தப் பாடல்களைச் சொல்லும்போது, இதன் முழுமையான அர்த்தத்தை உணர்ந்து/அறிந்து இருந்தால், மனத்தை ஒருமுகப்படுத்தி ஈடுபாட்டோடு சொல்வது எளிது. இதுவே இந்த உரையின் நோக்கம்.

Excellent explaination and east to understand. Looking forward to learn more.
ReplyDelete