அபிராமி அந்தாதி பாடல் #1 - உரை

நல்வித்தையும் ஞானமும் பெற

உதிக்கின்ற செங்கதிர், உச்சித் திலகம், உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம் போது, மலர்க்கமலை,
துதிக்கின்ற மின்கொடி. மென்கடிக் குங்கும தோயம் என்ன?
விதிக்கின்ற மேனி அபிராமி என்றன் விழுத்துணையே. 




யோகத்தில் இருந்தபடி ஆழமாக தியானம் செய்பவர்களுக்கு மனக்கண்ணில் செக்கச் செவேலென்ற சிவப்பு நிறத்தில், பிரகாசமான ஒளி தெரியும். இந்த ஒளி வெள்ளத்தையே பாடல் #47ல் "சூழும் சுடர்க்கு நடுவே கிடந்து சுடர்கின்றதே" என்று சொல்லுவார். இதை அன்னையின் வடிவாக வர்ணிக்கும் பட்டர், நமக்கு புரிவதற்காக, நாமும் அந்த தரிசனத்தை visualize செய்ய வேண்டும் என்று விரும்புகிறார். சிவப்பு நிறம் உள்ள, மேன்மையான  விஷயங்களை இங்கே லிஸ்ட் போடுகிறார். 

லலிதா ஸஹஸ்ர நாமத்தில், நாமாவளியை ஆரம்பிக்கும் முன்பாகச் சொல்லும் த்யான ஸ்லோகத்தின் தொடக்கமே "ஸிந்தூரானன விக்ரஹாம்" என்று தான் வரும். ஸம்ஸ்க்ருதத்தில்  "ஆனன" என்றால் முகம். கஜானன என்றால் யானை முகன். ஸிந்தூரானன என்றால் குங்குமம் போன்ற சிவந்த முகம் என்று அர்த்தம்.

அபிராம பட்டரும் தன்  முதல் பாடலிலேயே அதையே சொல்கிறார். அபிராமி அந்தாதியும் லலிதா ஸஹஸ்ர நாமமும் வெவ்வேறு அல்ல என்பதற்கு இதுவே போதுமே. பின்னர், பாடல் #6ல் சிந்தூர வண்ணப் பெண்ணே என்று மீண்டும் வரும். 

ஆண் தெய்வங்களைப் பாதத்தில் ஆரம்பித்து தலை முதல் 'பாதாதி கேசம்' எனும் விதமாகவும், பெண் தெய்வங்களைத் தலையில் ஆரம்பித்து பாதம் வரை 'கேசாதி பாதம்' எனும் விதமாகவும் விவரிப்பது, வருணனை செய்வது இந்திய மரபு என்கிறார் காஞ்சி மஹா பெரியவர் (தெய்வத்தின் குரல்). ஸௌந்தர்ய லஹரியில் ஸ்ரீ ஆதி சங்கரர் இந்த மரபைப் பின்பற்றி அம்பாளை வருணிப்பதைக் குறிப்பிடுகிறார் அவர். லலிதா சஹஸ்ரநாமத்திலும் இதே போலத்தான்.

இதே மரபை, முறையைத் தான் அபிராமி அந்தாதியிலும் பின்பற்றுகிறார் பட்டர்.

உச்சித் திலகம் என்று முதல் பாடலில் ஆரம்பிக்கும் அவர், 86ஆவது பாடலில் "மால், அயன் தேட, மறை தேட, வானவர் தேட நின்ற கால்" என்பது வரை 'கேசாதி பாதமாக' விளக்குகிறார்.

உதிக்கின்ற செங்கதிர் = அதிகாலை உதயமாகும் சிவப்பான சூரியன். 
அருணாம் கருணா தரங்கிதாக்ஷீம் என்று லலிதா சஹஸ்ரநாமம் த்யான ஸ்லோகத்தில் மீண்டும் வரும். சூரியன் முழு உதயமாவதற்கு முன் வானில் உள்ள சிவப்பு நிறத்துக்கு அருணா என்று பெயர். 

LS#6ஆவது திருநாமம்: உத்யத் பானு சஹஸ்ராபா: ஆயிரக்கணக்கான சூரியன்களைப் போன்ற பிரகாசம், நிறமுடையவள் 
#49ஆவது திருநாமம் "ஸர்வாருணா". முழுவதும் சிவப்பானவள் என்கின்றது.  

எல்லாப் புத்தகங்களிலும் ஸ்தோத்திரங்களிலும் அம்பாளைச் சிவப்பு நிறமாக வர்ணிக்கக் காரணம் என்ன?

கருணையின் நிறம் சிவப்பு 

மாதங்கி  எனும் ரூபத்திலும் மதுரை மீனாட்சி அம்மனும் பச்சை நிறம் என்றுதானே சொல்கின்றனர்? காளி கருப்பு நிறம் என்றும், நீலி என்பவள் நீல நிறம் என்றும் பலவாறாகச் சொல்கிறோமே?

பச்சை நிறம் என்பது படைப்பாற்றலைக் குறிக்கும். ஆக்கப்பூர்வமான சிந்தனைகள், ஆழ்ந்த நுண்ணறிவு, ஆராய்ச்சி செய்யும் திறன், புதிதாக ஒன்றை உருவாக்கும் திறமை,அதற்கான முனைப்பு  ஆகிய அனைத்தின் கூட்டுக் கலவையையே படைப்பாற்றல் Creativity என்கிறோம். ஜோதிட சாஸ்திரத்தின்படி இதற்குக் காரகர் புதன். இந்தக் காரணத்தால் தான் அவருக்கு உரிய நிறம் பச்சை என்று சொல்லப்பட்டுள்ளது.

அம்பிகை தான் படைப்பின் மூலம், ஜகத் ஜனனி என்றாலும் அவளுடைய மிகவும் முக்கியமான தன்மை, தலையாய சிறப்பு கருணை ஆகும். அம்பாள் கருணையின் வடிவம். 

கருணையின் நிறம் சிவப்பு என்றே நமது முன்னோர்கள் வகைப் படுத்தி உள்ளனர்.

(நமக்குத் தெரிந்தது, பரிச்சயமானது என்னவோ 'வறுமையின் நிறம் சிவப்பு' என்ற தமிழ்ப் படம் தானே! என்றால், அது கடவுள்-விரோத, இயற்கைக்கு முரணான, கம்யூனிஸ்ட்களின் கொள்கை, பிரச்சாரம் (Propaganda). இதைப் பற்றிய அந்தத் திரைப்படத்தில் வேலை செய்த, நடித்த/எழுதிய/இயக்கிய யாருமே  ஏழை அல்ல. எல்லோரும் கோடீஸ்வரர்கள்!)

"உதிக்கின்ற" என்ற வார்த்தையுடன் முதல் பாடல் தொடங்குகிறது. #100ஆம் பாடலின் கடைசி வார்த்தை "உதிக்கின்றவே" என்று முடியும். அதனால் தான் இதை அந்தாதி என்கிறோம். தமிழில் எத்தனையோ பேர் அந்தாதி எழுதி இருந்தாலும் எல்லாவற்றிலும் மிகவும் பிரபலமான, புகழ் பெற்ற நூல் அபிராமி அந்தாதிதான்.

திலகம் = பொட்டு. உச்சித் திலகம் = கல்யாணம் ஆன சுமங்கலிப் பெண்கள் நெற்றியின் உச்சியில், வகிட்டில் வைக்கும் குங்குமப் பொட்டு. சம்ஸ்கிருதத்தில் இதை சீமந்தம் என்பார்கள்.

'உதிக்கின்ற செங்கதிர் அபிராமியின் உச்சித் திலகம்' என்றும் சொல்லலாம்.

மாணிக்கம் = நவ ரத்தினங்களில், சிவப்பு நிறம் உள்ள கல். ஆங்கிலத்தில் ரூபி (Ruby) என்பார்கள். (ஆனால் சிவப்பு நிறத்தில் உள்ள கற்கள் எல்லாமே மாணிக்கம் அல்ல.)

லலிதா சஹஸ்ரநாமம் த்யான ஸ்லோகத்தில் "மாணிக்ய மௌலி ஸ்புரத்(து)" என்றால் மாணிக்கத்தால் ஆன கிரீடத்தை தலையில்  அணிந்தவள்" என்று வரும். மீண்டும் 14வது நாமத்தில் "குருவிந்த மணி ஸ்ரேணி கனத் கோட்டீர மண்டிதா". குருவிந்தம் என்பது ஓர் உயர்ந்த வகை மாணிக்கத்தின் பெயர். அந்த வகை மாணிக்கங்களை அடுக்கிச் செய்யப்பட்ட கிரீடத்தை அணிந்தவள் என்று அர்த்தம்.

மாணிக்கத்தின் மதிப்பு எல்லாருக்கும் தெரியாது. நம்மில் பல பேருக்கு  ரத்தினங்களைப் பற்றி எதுவுமே தெரியாது. அதுவும் இப்போது செயற்கை முறையில் Factory-களில் தயார் செய்கிறார்கள். Semi-precious என்கிறார்கள். நல்ல கற்களைத் தரம் பிரிக்க Gemology என்று தனியே ஒரு சப்ஜெக்டே  இருக்கிறது. அதில் அனுபவம் இருப்பவருக்குத்தான் விலை உயர்ந்த, தரமான கற்களைப் பற்றித் தெரியும். 

அதே போல, உண்மையான ஆன்மீக உணர்வுள்ளவர்களுக்கு மட்டுமே அபிராமியைப் பற்றி தெரியும் என்பதால் "உணர்வுடையோர் மதிக்கின்ற மாணிக்கம்" என்று சொன்னார்.

மாதுளம் போது = மாதுளம் பூவின் மொட்டு (bud). பாடல் .#101ல் மாதுளம்பூ நிறத்தாளை
 #560வது திருநாமம்: தாடிமி குஸுமப்ரபா: மாதுளம் பூவின் மொட்டு போன்ற பிரகாசம் உடையவள்  

கமலை = தாமரை. முதலில் சொன்ன மாதுளம் மொட்டிலிருந்து வேறுபட, 'மலர்' சேர்த்து மலர்க்கமலை என்று சொல்கிறார். இங்கே சுட்டுப்பெயராக, தாமரை மலரில் வாசம் செய்யும் லட்சுமியைக் குறிக்கும்.

மலர்க்கமலை துதிக்கின்ற மின்கொடி = லட்சுமியால் வழிபாடு செய்யப் படுகின்றவள், மின்னல் கொடியைப் போன்றவள். வானில் தோன்றும் மின்னல் நவீன விஞ்ஞானத்தின்படி மிகவும் சக்தி வாய்ந்த மின்சாரம் என்று  நாம் அறிவோம். பிரபஞ்சம் முழவதும் உள்ள சக்தி முழுமைக்கும் காரணமான பராசக்தியை மின்னல் என்பது பொருத்தம் தானே. #91: மின் அனையாளை.  also 55, 61
#107வது திருநாமம்: தடில் லதா ஸம ருசி:  ஒளிரும் மின்னலைப் போன்ற கொடியின் வடிவானவள் (லதா என்றால் கொடி)

மென்கடிக் குங்கும: மென்மையான வாசனை உடைய குங்கும

தோயம் = நீர், கடல். சிவப்பு லிஸ்ட்டின் கடைசியில் "குங்குமக் கடலோ?" என்று சொல்கிறார். கடலைப் போல, எல்லைகள் இல்லாத அளவுக்கு குங்குமத்தை கற்பனை செய்து பாருங்கள். (cf. ஏழ் கடல் அதனில் தோயம் - கம்பராமாயணம் யுத்த காண்டம் திருமுடி சூட்டு படலம் 22). 

விதிக்கின்ற மேனி: தந்த்ர சாஸ்திரங்களும் ஆகமங்களும் வர்ணனை செய்துள்ள விதிகளின்படி அம்பாளுடைய ரூபத்தை நான் காண்கிறேன் என்கிறார். கௌசிக கோத்திரத்தில், மிகவும் ஆச்சாரமான குடும்பத்தில் பிறந்த அபிராம பட்டர் முறைப்படி இவற்றைக்  கற்று ஓதினார் என்று கருத இடம் இருக்கிறது. மற்ற சிலர் சொன்னதைப் போல 'துர்த்தேவதை' உபாசனை செய்யவில்லை என்பதை வலியுறுத்தவே 'விதிக்கின்ற மேனி' என்கிறார். 

இப்படி சிவப்பான மேனியை உடைய அபிராமி என்னுடைய மேலான துணை என்கிறார் பட்டர். பாடல் 6ல், 8ல் "சிந்துர வண்ணம்" என்பார். பாடல்  #7: சிந்துரானன சுந்தரியே

விழுத்துணை = மேலான துணை. துணை = help, support etc.

மீண்டும் பாடல் 35ல் "விழுப்பொருளே" என்பார். விழுப்பொருள் = மேலான செல்வம் (புறநானூறு பாடல் #345, குறுந்தொகை #216).


Comments

Popular posts from this blog

அபிராமி அந்தாதி - உரை - அறிமுகம்

அபிராமி அந்தாதி - உரை: காப்பு

அபிராமி அந்தாதி: பின்னணி, வரலாறு