அபிராமி அந்தாதி: பாடல் #2 - உரை

 பிரிந்தவர் ஒன்று சேர

பாடல் #2:

துணையும், தொழும் தெய்வமும், பெற்ற தாயும், சுருதிகளின்
பணையும், கொழுந்தும், பதி கொண்ட வேரும், பனிமலர்ப்பூங்
கணையும், கருப்புச்சிலையும், மென் பாசாங்குசமும் கையில்
அணையும் திரிபுரசுந்தரி ஆவது அறிந்தனமே. 

"துணையும், தொழும் தெய்வமும், பெற்ற தாயும்" ஆகிய மூன்று சொற்களும், சிலேடையாக, இரண்டு அர்த்தங்கள் கொண்டதாகப் படுகிறது எனக்கு. இவை அபிராமியின் அடியவர்கள், சிவபெருமான் இருவருக்கும் பொருந்தும் என்று இங்கே கருத இடம் உண்டு:

சிவபெருமானின் இடப் பாகத்தில்( பாடல் #17 ), என்றும் அவரைப் பிரியாமல் இருப்பவள். (பாடல் #8ல் "எந்தை (என் தந்தை, அதாவது சிவன்) துணைவி"  என்பார்)  

சிவபெருமானே பூஜிக்கும், வணங்கும் தேவி அவள் (பாடல்  #7, #26)

சிவபெருமானைப் பெற்றவள் அன்னை அபிராமி (பாடல்  #25). இதைப் பற்றிய விளக்கத்தைப் பாடல் #25ல் விரிவாகப் பார்க்கலாம்.

தொழுவது = வழிபாடு செய்வது #101: தொழுவார்க்கு

வேண்டுவது = எதையேனும் வேண்டிக் கேட்பது, பிரார்த்தனை செய்வது 

வணங்குவது  = கும்பிடுவது, தோத்திரம் செய்வது 

இவை எல்லாம் ஒரே வகை அல்ல.

ஒன்பது வகை பக்தி!  

ச்ரவணம் கீர்த்தனம் யஸ்ய /விஷ்ணௌ
ஸ்மரணம் பாத ஸேவனம் 
அர்ச்சனம் வந்தனம் தாஸ்யம் 
ஸக்யம் ஆத்ம நிவேதனம்   

(SB ஸ்ரீமத் பாகவதம் 7.5.23).

1) ச்ரவணம் - காதால் கேட்டல்  

2) கீர்த்தனம் - பக்திப் பாடல் பாடுதல்  

3) ஸ்மரணம் - எப்போதும் நினைத்தல்  

4) பாதஸேவனம் - திருவடித் தொண்டு செய்தல்  

5) அர்ச்சனம் - மலரால் பூஜித்தல்  

6) வந்தனம் - நமஸ்கரித்தல்  

7) தாஸ்யம் - அடிமையாதல்  

8)ஸக்யம் - தோழமை கொள்ளல்  

9) ஆத்ம நிவேதனம் - தன்னையே அர்ப்பணித்தல் 

--

பெற்ற தாயும்: LS:#285: ஆ ப்ரஹ்ம கீட ஜனனீ . பிரம்மா முதல் கண்ணுக்குத் தெரியாத கிருமிகள் வரை எல்லாவற்றையும் படைப்பவள் அவள் என்று இதற்கு அர்த்தம். கீட என்றால் புழு, பூச்சிகள், கிருமிகள்.

#22: பிரமன் முதலாய தேவரைப் பெற்ற அம்மே!

சுருதி = வேதம். (எழுதி வைத்து படிக்காமல், [ச்ரவணம்=காதால் கேட்டல்] காதால் கேட்டு வேதங்களை படிப்பதால் இந்தப் பெயர்). நம்முடைய நாட்டில் சமூக, கலாச்சார, ஆன்மீக சிந்தனைகள், புத்தகங்கள் எல்லாவற்றுக்கும் அடிப்படை ஸ்ருதி மற்றும் ஸ்ம்ருதி ஆகியவை.

 லலிதா சஹஸ்ர நாமத்தில் இவை இரண்டும் அம்பாளின் திருநாமங்களாகவே சொல்லப்பட்டு இருக்கின்றன: #539  ஸ்ருதி #540 ஸ்ம்ருதி. அவளே வேதங்களின் பிறப்பிடம் #338: 'வேத ஜனனீ'

-

முன்னதாக, #289ஆவது திருநாமம் "ஸ்ருதி சீமந்த ஸிந்தூரி க்ருதபாதாப்ஜ தூளிகா", அதாவது ஸ்ருதி ஆகிய வேதங்கள் அம்பாளுடைய திருவடிகளில் தலை வணங்குவதால் அவளுடைய பாததூளி வேதங்களுக்கு திலகமாக இருக்கிறது என்று அர்த்தம். இதையே பாடல் 71ல் "அருமறைகள் பழகிச் சிவந்த பாதாம்புயத்தாள்" என்று இனிய தமிழில் அழகாகச் சொல்லியிருப்பார்.  பாடல் 11ல் 'மறை நான்கினுக்கும் தான் அந்தமான சரணார விந்தம்' என்பார்.

-

பணை = பெருக்கம், விரிவாக்கம். சுருதிகளின் பணை = வேதத்தின் விரிவாக்கம், விளக்கம் என்று வரும். ("பிழைத்தல்/தொழில்: பணையே பிழைத்தல் பெருப்பும் ஆகும்" - தொல்காப்பியர் 2-8-42). வேதங்களுக்கு விளக்கங்கள் வேத சாகைகள் எனப்பட்டன. சாகை என்றால் கிளை என்று பொருள்.

பணை: கிளை (பாடல் வரி :அகம்.251:8 அகம்.372:7 அகநானூற்று அகராதி (2021)


ஸ்ருதி எனப்படும் வேதங்கள் ஒவ்வொன்றிலும் ஸம்ஹிதை, பிராமணங்கள், ஆரண்யங்கள், உபநிடதங்கள் என நான்கு கிளைகள் உள்ளன.

ஸ்ம்ருதி எனப்படும் மற்ற நூல்களை ஆறு கிளைகள் கொண்டதாகப் பிரிக்கின்றனர்:

1. புராணங்கள்

2. இதிஹாஸங்கள்: ராமாயணம், மஹா பாரதம். (இதி என்றால் "இது", "இப்படி", ஹாஸ என்றால் "நடந்தது", அதாவது "முன்னொரு காலத்தில் இப்படி நடந்தது" என்பதை, உண்மையான வரலாற்றை விளக்கும் நூல்களே இவை என்று தெளிவு படுத்துவதற்காக இந்த விளக்கம்).

3. தர்ம ஸூத்ரங்கள் மற்றும் தர்ம சாஸ்திரங்கள் 

4. வேதாங்கங்கள். இவை ஆறு: 

a. சிக்ஷை शिक्षा: சொற்களின் ஒலி (phonetics) அல்லது உச்சரிப்பு (pronunciation), அக்ஷரங்களின்  ஒலிகள் பிறக்கும் விதம் (phonology). இதில் முக்கியமானவை 'சந்தி' பற்றிய விதிகள் ஆகும். சொற்கள் இணைந்து புதிய சொற்கள் உருவாக்கும் போது கடைப் பிடிக்க வேண்டிய விதிகள் இவை.

b. சந்தஸ்  छन्दस्: யாப்பிலக்கணம், உரைநடை (prosody). சீர், தளை, யாப்பு என்று தமிழ் இலக்கணத்தில் இருப்பதைப் போல சம்ஸ்க்ருதத்தில் உள்ள பல விதமான அளவுகள் உள்ள சந்தஸ்களைப் பற்றியது. (ஆங்கிலத்தில் poetic meter என்பார்கள்). 

c.வியாகரணம்: இலக்கணம் (grammar). சொற்களைப் பயன்படுத்தி ஒரு கருத்தை முறையாக வெளிப்படுத்தும் விதிகளைப் பற்றியது.

d. நிருக்தா निरुक्त என்பது சொற்களின் மூலம், அதாவது வேர்ச் சொற்கள் (root words) பற்றிய படிப்பாகும். தூய தமிழில் சொற்பிறப்பியல் (etymology). 

சம்ஸ்க்ருதத்தில் வேர்ச் சொற்கள் மிகவும் முக்கியமானதாகும். உதாரணமாக, க், ர் ஆகிய இரண்டு ஒலிகளும் சேர்ந்த வேர்ச் சொல் "க்ரு". இதற்கு  'செய்வது, செயல்' என்று அர்த்தம். இந்த வேர்ச் சொல்லில் இருந்து வந்தவை தான்  கர்மா (செயல்), கர்த்தா (செய்பவன், செய்தவன்), காரியம் (செயல்), கரோமி (செய்கிறேன்), க்ருதயுகம் (நன்றாகச் செய்யப்பட்ட யுகம்), க்ரியம் (செய்வது), கரம் (ஒரு செயலைச் செய்ய உதவும் அங்கமாகிய கை), கருவி (ஒரு செயலைச் செய்யத் தேவையான உபகரணம்) போன்ற வார்த்தைகள்.

இவ்வளவு ஏன், சம்ஸ்க்ருதம் என்ற மொழியின் பெயரே இந்த வேர்ச் சொல்லில் இருந்து வந்தது தான். முழுமையாக, சிறப்பாகச் செய்யப்பட்டது என்று அதற்குப் பொருள்.

அம்புஜம் என்றால் அப்பு+ஜம். வட மொழியின் சந்தி விதிக்கேற்ப அம்புஜம் என்று வரும். அப்பு என்றால் நீர். ஜம் என்றால் பிறப்பவை (இதே போலத்தான், 'அண்டஜம்' என்றால் முட்டையில் இருந்து பிறப்பவை என்று அர்த்தம்). அம்புஜம் என்றால் பொதுவாக 'நீரில் பிறப்பவை' என்றாலும் சிறப்புப் பெயராக தாமரை மலரைக் குறிக்கும். 

[இதைப் பற்றி எழுதும் போது, இன்னொரு விஷயத்தைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.'எளியது', 'தும்மல்' இரண்டிலும் ஒரே "து" வந்தாலும் உச்சரிப்பில் வித்தியாசம் உள்ளது. தமிழ் மெய்யெழுத்துக்களில் இந்த ஒலி வேறுபாடுகள் இல்லாததால் அவரவர் பயிற்சி/அறிவுக்கு ஏற்ப உச்சரிப்பு மாறும். வட மொழியில் உள்ள ஸ்லோகங்களைத் தமிழ் புத்தகங்களில் இருந்து படிப்பவர்கள் இவற்றைக் நுணுக்கமாகக் கவனிக்க வேண்டும். 

பிள்ளையாருக்கு சொல்லும் ஒரு பிரபலமான ஸ்லோகம்:

வக்ர துண்ட்ட மஹா காய, 
சூர்ய கோடீ ஸமப்ரப,
நிர்விக்னம் குரு மே தேவ,
ஸர்வ கார்யேஷு ஸர்வதா. 

இதில், மூன்றாவது வரியில், குரு என்பதைப் பலரும் guru என்று சொல்கிறார்கள். அது தவறு. Kuru என்பதே சரி.

vakra thunta mahaa kaaya

soorya kotee sama prabha

nirvignam kuru mae dheva

sarva kaaryeshu sarvadhaa

'நிர்விக்னம் kகுரு மே' என்றால் "விக்னங்கள் இல்லாமல் செய்வாய்" என்று அர்த்தம். Nirvignam guru mae என்றால் "நிர்விக்னம் என்னுடைய குருவாகும்" என்று தவறாகப் பொருள்படும்.]

e.கல்பம்: வேத முறைப்படி யாகங்கள், பூஜைகள், ஸம்ஸ்காரங்கள் செய்யும் விதிகள் பற்றியது 

f. ஜ்யோதிஷம் (தமிழில் சோதிடம்) எனப்படும் கால விஞ்ஞானம்/கால விதான சாஸ்திரம்.

5. ஷட் தர்சனம். இவையும் ஆறு: 1. ந்யாய ஸூத்ரம் (அதாவது Philosophy தத்துவம், லாஜிக் ) 2.ஸாங்க்ய ஸூத்ரம் Ontology 3. யோக ஸூத்ரம் 4. வைசேஷிக ஸூத்ரம் Epistemology 5.  பூர்வ மீமாம்ஸை 6. உத்தர மீமாம்ஸை 

6. உபவேதங்கள்: இவை எத்தனை, என்னென்ன ஆகிய விவரங்களில் சிறு வேறுபாடுகள் உள்ளன:     

தனுர் வேதம்: வில் வித்தை  
ஆயுர்வேதம்: உடலும் மனமும் ஆரோக்கியமாக, நீண்ட ஆயுளுடன் வாழ வழி காட்டும் சாஸ்திரம். Literally, study or science (knowledge) of life.   
காந்தர்வ வேதம்: இசை 
ஸ்தாபத்ய வேதம்: கட்டிடக் கலை. சமீப காலங்களில் புகழ் பெற்றுள்ள வாஸ்து சாஸ்திரம் இதில் அடங்கும். 

பாடல் #3 'எவரும் அறியா மறை', பாடல் #10 'எழுதா மறையின் ஒன்றும் அரும்பொருளே',  #20: "அறைகின்ற நான்மறையின் அடியோ? முடியோ?" என்று மீண்டும் வரும். இந்த "மறை" என்பதை அடுத்த பாடலின் விளக்கத்தில் விரிவாகப் பார்க்கலாம்.

கொழுந்து = இலையின் தளிர் (leaf's bud). வேதத்தின் கிளைகளும், இலைகளும், 

பதி கொண்ட வேரும் = நிலத்தில் ஊன்றி நிற்கும் வேராகவும்  இருப்பவள். பாடல் 55இல் "அருமறைக்கு முன்னாய் நடு எங்குமாய் முடிவாய முதல்வி" என்று மீண்டும் வரும்.

 (கவிஞர் கண்ணதாசன் உரை: வேதங்களில் தொழிலாகவும், அவற்றின் கிளைகளாகவும், வேராகவும் நிலைபெற்று இருக்கின்றாள்.)

கணை = அம்பு. பூங்கணை: மலர்களால் ஆன அம்பு. பாடல் #62ல்  "செங்கைக் கரும்பும் மலரும்" என்று வரும். இந்த ஐந்து மலர் அம்புகளும் ஐந்து வித மலர்களால் ஆனவை என்று சொல்லப்பட்டு இருக்கிறது 

கருப்புச் சிலை: கரும்பு என்பது திரிந்து இங்கே கருப்பு என்றானது. சிலை என்றால் வில் (அக நானூறு). 

செங்கைச் சிலையும், அம்பும் என்று மீண்டும் வரும்.

கரும்பால் ஆன வில் நம் மனதைக் குறிக்கும். 

லலிதா சஹஸ்ரநாமத்தில் 10ஆவது திருநாமம் : மனோ ரூபேக்ஷு கோதண்டா: கோதண்டம்: வில் .

#11ஆவது திருநாமம் : : பஞ்ச தன்மாத்ர ஸாயிகா: ஐந்து தன்மாத்திரைகளை மலர் அம்புகளாக க் கையில் வைத்திருப்பவள் என்று பொருள்.

'தன்மாத்திரை' என்றால் என்ன? என்பதை தெரிந்து கொள்ள, முதலில் பஞ்ச பூதங்கள் என்றால் என்ன என்று புரிந்து கொள்ள வேண்டும்.

பஞ்ச பூதங்கள்  என்றால் என்ன?

பஞ்ச பூதங்கள் என்ன என்பது பலருக்கும் தெரிந்திருக்கும். நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம்.

வேதங்களில்  இவை முறையே ப்ருத்வி/பூமி (Prithvi, Bhoomi), அப் (Ap, தூய தமிழில் அப்பு), அக்னி (Agni),வாயு (Vayu),  ஆகாசம் (Aakaasa) ஆகிய சொற்களால் குறிக்கப்படுகின்றன. 

பூதம் என்பது பேய், பிசாசு போன்ற ஒன்று என பேச்சு வழக்கில் உள்ள அர்த்தத்தில் இவற்றைப் புரிந்து கொள்ளக் கூடாது. சரியான அர்த்தம் First Principles என்பது.

ஆங்கிலத்தில் இதைப் பற்றி எழுதுபவர்கள் பெரும்பாலும் இவற்றை (Primordial) Elements என்றே குறிப்பிடுகிறார்கள். அது சரியான வார்த்தை அல்ல.

நவீன விஞ்ஞானத்தில் கூறப்படும் தனிமங்கள் (Chemical elements) வேறு, பஞ்ச பூதங்கள் என்பது வேறு. இந்த உலகத்தில் ஸ்தூலமாக உள்ள பொருட்கள் அனைத்தும் பஞ்ச பூதங்களால் ஆனவை என்று நம் நூல்கள் சொல்கின்றன. ஆனால் Chemistry ஃபார்முலாக்களை போல இதை புரிந்து கொள்ள முடியாது.  

அக்னி என்ற சொல்லுக்கு நெருப்பு என்ற ஒரு அர்த்தம் இருந்தாலும் அக்னி என்ற பஞ்சபூதம் நெருப்பு மட்டும் அல்ல. சக்தி என்று சொல்லப்படும் Energy யின் எல்லா வடிவங்களும் அக்னி தான். இதன் முக்கியமான தன்மை "மாற்றம்" (Transformation) என்பதாகும். நெருப்பில் சமைக்கப்படும் காய்கறிகள், மளிகைப் பொருட்கள் எப்படி உணவாக மாறுகின்றதோ அதைப் போல எந்த ஒன்றையும் மாற்றக்கூடிய சக்தியை அக்னி என்கிறோம்.

மின்சாரம், நீராவி, நம் வயிற்றில் உள்ள ஜீரண சக்தி, கோபம், சூரிய ஒளி, எல்லாமே அக்னி தான். இதே போலத்தான் மற்றவையும்.

இந்த பஞ்ச பூதங்களின் சூட்சுமமான புலன்களை, அந்தப் புலன்களில் இருந்து நாம் பெறும் அறிவையே 'தன்மாத்திரைகள்' என்று சொல்கிறோம்.

அம்பாளுடைய கையில் உள்ள ஐந்து மலர் அம்புகளும் இந்த பஞ்ச தன்மாத்திரைகளைக் குறிக்கின்றன 


1. பூமி - கந்தம் (மணம், வாசனை) - மாம்பூ 

2. நீர் - ரஸம் (சுவை) - செவ்வாம்பல்  Nymphaea pubescens (Indian red water lily)

3. அக்னி - ரூபம் (தோற்றம், வடிவம் ) - செவ்வல்லி dark red lily

4.வாயு - தொடு உணர்ச்சி, ஸ்பர்சம்  - செங்கழுநீர் நல்ல குணங்கள், ஒழுக்கம், அறம், தூய்மை ஆகியவற்றைக் குறிக்கும் (as a symbol of virtue, discipline, and purity)

5. ஆகாசம்-ஒலி. சப்தம்  - தாமரை படைப்பாற்றல் creativity

தாமரை 

செங்கழுநீர்

செவ்வல்லி

செவ்வாம்பல்  

“கழுநீர் என்பது நீண்டு நுனி கூர்மையான நீர்ப்பூ” என்பர். Nymphaea nouchali, often known by its synonym Nymphaea stellata

ஆம்பல் வகையில் தமிழ் நாட்டில் வெண்ணிற மலரையுடைய வெள்ளாம்பலும், நீலநிற மலரையுடைய நீல ஆம்பலும், செந்நிற மலரையுடைய அரக்காம்பலும் (செவ்வல்லி) உள்ளன. பொதுவாக ஆம்பல் என்பது சங்க இலக்கியங்கள் வெள்ளாம்பலைக் குறிக்கின்றன. சங்க இலக்கியப் பெயர்: குவளை, நீலம், செங்குவளை, காவி. பிற்கால இலக்கியப் பெயர்: செங்கழுநீர், கழுநீர், நீலம், காவி, செங்குவளை, நீலோற்பலம். பொதுப்  பெயர்: நீலத்தாமரை, நீலோற்பலம். நீல அல்லி, செங்கழுநீர்.

அம்பாளின் கையில் கரும்பால் ஆன வில்லும் மலர்களால் ஆன அம்பும் உள்ளன. இவை இரண்டும் கையில் வைத்துள்ள மற்றொருவர் மன்மதன். என்ன வித்தியாசம்?

நம்மை ஆசைக்கடலில் விழ வைப்பவன் மன்மதன். அதில் இருந்து நம்மைக் காப்பாற்றிக் கரை சேர்ப்பவள் அபிராமி.

பாசாங்குசமும் = பாசம் + அங்குசமும். பாசம் = எமன் கையில் உள்ள கயிறு, நம் எல்லா ஆசைகளையும்  குறிக்கும். அங்குசம் = யானையை அடக்க உதவும் ஆயுதம். தொரட்டி என்று சொல்வார்கள். யானை என்பது நம் ஆணவத்தை, அகங்காரத்தை குறிக்கும்.  

லலிதா சஹஸ்ரநாமத்தில் 8ஆவது திருநாமம்: ராக ஸ்வரூப பாசாட்யா. ராகம் என்ற வடமொழிச் சொல்லுக்கு ஆசை என்று பொருள்.;  9ஆவது திருநாமம்: : க்ரோதாகார (அ)ங்குஸோ ஜ்வலா 

பாடல் #32:அந்தகன் கைப்பாசம், பாடல் #101 ஐங்கணை பாசாங்குசமும் கரும்பும் அங்கை சேர்த்தாளை

பாடல் #85: பார்க்கும் திசைதொறும் பாசாங்குசமும் பனிச்சிறை வண்டு ஆர்க்கும் புதுமலர் ஐந்தும் கரும்பும் என்று மீண்டும் வரும்.

இவை இரண்டும் கடுமையான ஆயுதங்கள் என்றாலும் உன் கையைச் சேர்ந்ததால் மென்மையாக மாறிவிட்டன எனும் விதமாக "மென் பாசாங்குசம்" என்கிறார்.

திரிபுரசுந்தரி:

"திரிபுரம்' என்றால் "மூன்று உலகங்கள்'. பூலோகம், பாதாளலோகம், தேவலோகம் ஆகியவை (பூர் புவஸ் சுவஹ என்று ஸந்தியா வந்தனத்தில் சொல்வது இதைத்தான்). திரிபுரசுந்தரி என்றால் இந்த மூன்று உலகங்களிலும் மிகப் பெரிய அழகி, பேரழகி என்று அர்த்தம். லலிதா சஹஸ்ர நாமத்தில் இதைப் பற்றி சில முக்கிய விஷயங்கள் உள்ளன. அதைப் பற்றி பின்னர் வரும் பதிவுகளில் விரிவாகப் பார்க்கலாம்.

லலிதா சஹஸ்ரநாமத்தில் #234ஆவது திருநாமம்: மஹா த்ரிபுர சுந்தரி.


Comments

Popular posts from this blog

அபிராமி அந்தாதி - உரை - அறிமுகம்

அபிராமி அந்தாதி - உரை: காப்பு

அபிராமி அந்தாதி: பின்னணி, வரலாறு