சொர்க்கமும் நரகமும்



நாடகங்களிலும் திரைப் படங்களிலும் மட்டுமே இவற்றைப் பார்த்து அறிந்து கொண்டுள்ள நம்மில் பலருக்கு இவற்றைப் பற்றிய தெளிவு இல்லை. பெரும்பாலானோர், நமது புராணங்களில் சொர்க்கத்தைப் பற்றியும் நரகத்தைப் பற்றியும் கூறப்பட்டுள்ள விவரங்கள், விளக்கங்களை மேலோட்டமாக, literal ஆக அர்த்தம் பண்ணி கற்பனை செய்பவர்கள் தாம்.

சொர்க்கம் என்பது ஆடம்பர வசதிகள் நிறைந்த, பொன்னும் மணியும் கொட்டிக்கிடக்கும் அலங்கார மாளிகை போலவும், ரம்பை, ஊர்வசி, மேனகை போன்ற அழகான தேவலோகப் பெண்கள் நடனம் ஆடி மகிழ்விக்கும் இடம் என்றும் திரைப்படங்களைப் பார்த்து பெரும்பாலானோர் ஒரு கற்பனை உலகத்தை/பிம்பத்தை (இமேஜ்) மனதில் வைத்து இருக்கிறோம். 

இதற்கு நேர்மாறான நரகம் என்பது கொடூரமான தண்டனைகள் தரப்படும் இடம் என்று சில புராணங்களிலே சொல்லப்பட்டு இருப்பதன் அடிப்படையில் திரைப்படங்களில் விரிக்கப்பட்டு இருப்பதும் நமக்கு பரிச்சயம். உண்மையில் சொர்க்கம் , நரகம் என்றால் என்ன? இதைப்பற்றி விரிவாக விளக்குவதற்கு முன் மரணம் என்றால் என்ன என்று புரிந்து கொள்வது முக்கியம்.

மரணத்துக்குப் பின் நம்முடைய உயிர், ஜீவன் என்னவாகிறது? என்பதைப் பற்றி நம்முடைய ஹிந்து மதம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னேயே ஆழ்ந்து சிந்தித்து, விளக்கியுள்ள, பேசியுள்ள அளவுக்கு மற்ற எந்தவொரு மதத்திலும் அல்லது கலாச்சாரத்திலும் இல்லை என்பதே நிதர்சனமான உண்மை.

லோகம் என்று வடமொழியிலும் உலகம் என்று தமிழிலும் நாம் குறிப்பிடுவது, பொதுவாக, நாம் வாழும் இந்த பூமியைப் பற்றியே ஆகும். ஆனால் ஆன்மீக நூல்களில் நாம் வாழும் இந்த உலகத்தைப் போலவே வேறு பல, ஏராளமான உலகங்கள் இருப்பதாக நமது முன்னோர்கள் கூறி வைத்துள்ளனர் என்று ஏற்கெனெவே காப்புச் செய்யுளின் உரையில் விரிவாகப் பார்த்தோம்.

இது நம்ப முடியாத விஷயமாகவும், நவீன விஞ்ஞானத்துக்கு விரோதமாகவும் நமக்குத் தோன்றுகிறது. வேறு கிரகங்களில் உயிர்கள் உள்ளதா என்பது பற்றி Search for Extra Terrestrial Intelligence (SETI) என்று பிரபலமாக உள்ள திட்டம் 50 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்காவில் உள்ள ஒஹயோ (Ohio) மாநிலத்தில் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாஸா (NASA) தலைமையில் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றது. (இப்போதும் இது தொடர்கிறதா என்று தெரியவில்லை). இதுவரை அறிவியல் பூர்வமான ஆதாரம் எதுவும் கிடைத்ததாகத் தெரியவில்லை. 

நமது ஹிந்து மதத்தின் ஆணி வேராக கருதப்படுபவை வேதங்கள். நான்கு வேதங்களிலும் மிகவும் முதன்மையானது, பழமையானது என்று பரவலாக எல்லாச் சான்றோர்களாலும் ஒப்புக்கொள்ளப்படுவது ரிக் வேதமாகும். ரிக் வேதத்தில் மரணத்தின் தேவதையாக, இறைமையாக விவரிக்கப்படுகிறார் யமன். விச்வான் எனப்படும் சூரியனுக்கும் சந்த்யா/சரண்யூவுக்கும் யமன், யமி என்று பிறந்த இரட்டையர்களைப் பற்றி ரிக் வேதத்தில் பல இடங்களில் வருகிறது. 

யம தர்மராஜன் என்றும் காலன் என்றும் அழைக்கப்படும் யமனுடைய வேறு பெயர்களிலேயே அவரைப் பற்றிய, அதாவது மரணத்தைப் பற்றிய ரகசியமும் ஒளிந்திருக்கிறது. இதை போலவே, யமியின் மற்ற பெயர்களைப் புரிந்து கொண்டால் இது மேலும் எளிதாக விளங்கும். பிற்கால நூல்கள் யமியை 'யமுனை' என்றும் 'காலிந்தி' என்றும் கூறுகின்றன. காலிந்தி என்றால் கருப்பு நிறமுடையவள் என்று பொருள். 

இவர்களை காலத்தின் (சூரியனின்) இரட்டைக் குழந்தைகள் என்றது பகலையும் இரவையும் பற்றிய குறியீடாகும். பகலும் இரவும் காலத்தின் துளிகள் என்பதே இந்த உருவகத்தின் உள்ளார்ந்த அர்த்தமாகும். வேத மரபின்படி சூரியன் தான் கால, நேரத்தின் அதிபதி. இராமாயணத்தில் உள்ள, சூரியனைப் போற்றும் ஆதித்ய ஹ்ருதயம் என்ற, மிகவும் பிரபலமான ஸ்தோத்திரத்தில் "ஜ்யோதிர் கணாநாம் பதயே தினாதி பதயே நம:" என்று வரும். ஒளி வீசும், ப்ரகாசமான அனைத்திற்கும், (தினாதி பதி = தினம் + அதிபதி) பகல் நேரத்துக்கும் அதிபதி, தலைவன் என்று இதற்கு அர்த்தம்.

இன்றைய விஞ்ஞான ரீதியாகவும் சூரியனைச் சுற்றி நமது பூமி சுழன்று வரும் காலத்தை ஒட்டியே உலகம் முழுவதும் நேரம், காலம் அளக்கப்படுகிறது. அத்தகைய சூரியனின் மகன் என்பதால் யமனைக் காலன் என்று அழைக்கிறோம். அதாவது, மரணம் என்பது காலத்தின் போக்கில், கட்டுப்பாட்டில் நடக்கும் ஒரு நிகழ்வாகும்.

ஒவ்வொரு நொடியும் நடக்கும் பிறப்பு - இறப்பு

நான் இந்தத் தேதியில் இந்த இடத்தில் பிறந்தேன் என்று நம்முடைய பிறந்த தேதியைச் சொல்கிறோம். வருஷாவருஷம் கொண்டாடுகிறோம். உண்மையில், பிறப்பும் இறப்பும் நம் உடம்புக்குள்ளே ஒவ்வொரு நொடியும் நடந்து கொண்டிருக்கிறது. நம் உடம்பில் இரத்தம், சதை, நரம்புகள், உறுப்புக்கள் எல்லாமே செல்களால் (Cell) ஆனவை. தூய தமிழில் உயிர்க்கூறு, உயிர்மம் என்கிறார்கள். 

வெவ்வேறு பாகங்களில் உள்ள செல்கள் காலத்தின் போக்கில் செயலிழந்து, இறந்து போகின்றன. Programmed_cell_death எனப்படும் இந்த செல்களின் இழப்பை ஈடு செய்வதற்காக நம்முடைய உடலில் உள்ள ஒவ்வொரு 'செல்'லும் தன்னைத் தானே இரட்டிப்பாக்கிப் (replication) புதுப்பித்தபடி, புதிய செல்கள் பிறந்த வண்ணம் இருக்கின்றன. ஒவ்வொரு நொடியும் இது நம் உடம்பின் உள்ளே நடந்து கொண்டு இருக்கிறது. 

இந்த செல்கள் எப்படி என்னவாக மாறும் என்பதற்கான வழிமுறைகள், கட்டளைகள் (instructions) செல்லில் உள்ள க்ரோமோஸோம்களின் (chromosome) ஒரு பகுதியான DNA என்ற சங்கிலித் தொடர்களில் அமைந்துள்ளன. (இதைப் பற்றிப் படிப்பதே Genetics எனப்படும்). 

மரபணு என்று அழைக்கப்படுகின்ற ஜீன்கள் (Gene) இந்தக் க்ரோமோசோம்களுக்குள்ளே தான் இருக்கின்றன. பல DNA க்களால் உருவான ஒரு தொடர் (Sequence) ஏதாவது ஒரு குறிப்பிட்ட விஷயத்துக்குக் காரணியாகும் போது ஜீன் என்று அழைக்கப்படுகிறது. வட்ட வடிவ க்ரோமோசோம்களைப் பெற்றுள்ள ஒரு சில பாக்டீரியாக்களைத்தவிர மற்ற எல்லா உயிர்களுக்கும் இந்தக் க்ரோமோசோம்கள் நீளமாக இருக்கும். 

Double Helix

சுழலும் ஏணிப்படிகளைப் போன்ற வடிவத்தில் (double helix, பார்க்க: படம் ) சுருண்டு பிணைந்திருக்கும் DNA இழைகள் தனித்தனியே இரண்டாகப் பிரிந்து, தங்களைப் போலவே ஒரு புதிய பிரதியை, இன்னொரு DNA வை உருவாக்கும். இதற்குப் பிறகு, அந்தச் செல்லின் மற்ற பகுதிகள் இதே போல பிரதி எடுக்கப்படும். இதற்கு Cell division என்று பெயர்.

இவற்றின் முடிவுப் பகுதியில் (சமையல் குறிப்புகளில் இறுதியில் "garnish/அலங்காரம் செய்து பரிமாறவும்" என்று சொல்வதைப் போல, புத்தகங்களின் கடைசியில் "முற்றும்" என்று போடுவதைப் போல, DNA-வின் கடைசியில் (lid) மூடி அல்லது (T-loop) முடிச்சைப் போன்று இருக்கும் பகுதிக்கு டெலோமியர் (Telomere) என்று பெயர். DNA Replication கட்டளைகள் இதற்கு மேல் இல்லை என்பதைப்போல அமைந்துள்ள இந்த முடிச்சுப் பகுதி/மூடி முழுவதுமாக இரட்டிப்பாவதில்லை. இதனால் ஒவ்வொரு தடவை ஒரு புது செல் பிறக்கும்போதும் இந்த டெலோமியர்களின் ஒரு பகுதியை நாம் இழக்கிறோம்.

இது தொடர்ச்சியாக நடப்பதால், ஒரு செல்லின் அடுத்தடுத்த தலைமுறையாக பிறக்கும் பிரதிகள் - ஒரு கட்டத்தில் - டெலோமியர் இல்லாத நிலையை அடைகிறது. அதற்குப் பிறகு அந்த செல் இரட்டிப்பாவதில்லை. இதை Hayflack's limit என்கிறார்கள். செல்கள் இரட்டிப்பாகவில்லை எனும் நிலையை அடைந்தால் அந்தக் செல்கள் உள்ள உறுப்பு/ பாகம் ஒழுங்காக வேலை செய்யாது . மூளைச் செல்கள் இப்படி ஆனால் ஞாபக மறதி அதிகரிக்கும். நம்முடைய தோலுக்கும் தலை முடிக்கும் நிறத்தைத் தரும் மெலனின் (Melanin) என்ற புரதத்தை உற்பத்தி செய்யும் செல்கள் இந்த நிலையை அடைந்தால் தோல் சுருக்கம் அடையும், தலை முடி நரைக்கும்.

வயதாகி, முதுமை/மூப்பு எனும் Senescence நிலையை எல்லா உயிர்களும் அடைவதற்கு இதுவே காரணம் என்று விஞ்ஞானம் கூறுகின்றது. [இதற்கு ஒரே ஒரு விதி விலக்கு உள்ளது. புற்று நோய் எனப்படும் கேன்சர் செல்களில் டெலோமியர் இழப்பைத் தவிர்க்கும் ஒரு புரதம் (a protein called Telomerase) இருப்பதால் அவை மட்டும் அழிவின்றி இரட்டிப்பாவதாகக் கண்டு பிடித்து இருக்கிறார்கள்.] இவ்வளவு விரிவாக இதை எழுதுவதற்குக் காரணம், மரணம் என்பது நம் உடம்பின் ஒவ்வொரு செல்லிலும், நம்முடைய ஜீன்களில் ஏற்கெனவே அளவிடப் பட்டுள்ளது.

நாம் அன்றாடம் பயன்படுத்தும் பிரஷர் குக்கரில் உள்ள விசில் என்பது அடிப்படையில் நேரம் காட்டும் ஒரு கருவியாகும். இன்ன சூட்டில், இன்ன அழுத்தத்தில் இவ்வளவு நேரம் சமைப்பதையே 2 விசில், 3 விசில் என்று சொல்கிறோம். அதே போல, நம்முடைய DNAவில் உள்ள இந்த டெலோமியரின் நீளம், நமக்கு இன்னும் மீதமுள்ள ஆயுளைக் காட்டும் ஒரு கடிகாரம் என்றே சொல்லலாம்.

காலத்துக்கும் மரணத்துக்கும் உள்ள நெருங்கிய தொடர்பைக் குறிப்பிடவே மரணத்தின் தேவதை 'யமன்' என்றும், அவனுக்கு இன்னொரு பெயர் காலன், அவன் சூரியனின் மகன் என்றும் நம் முன்னோர்கள் சொல்லி வைத்தனர். ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஆயுளுக்கும், மரணத்திற்கும் காரகர் சனி. இவரையே கர்மாவிற்கும் காரகர் என்று ரிஷிகள் சொல்கின்றனர். சனியும் சூரியனின் மகன் தான். இந்த நூல்களில் சனிக்கு தரப்பட்டுள்ள பல பெயர்களில் ஒன்று காலன் என்பதாகும். காலத்துக்கும் மரணத்துக்கும் உள்ள தொடர்பையே இதுவும் குறிப்பிடுகிறது.

"பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே" என்று இதையே தான் மிகவும் பழமையான சங்கத்தமிழ் நூலும் (புற நானூறு) குறிப்பிடுகிறது என்று கூடச் சொல்லலாம்.

கர்மா என்பதும் மறுபிறப்பு என்பதும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள். ஒன்று இல்லாமல் மற்றது இல்லை. மறு பிறப்பு என்ற விஷயம் நடப்பதால் மட்டுமே கர்மாவின் தொடர்ச்சி என்பது சாத்தியமாகிறது. இந்தப் பிறப்பில் மட்டுமல்லாது இதற்கு முன் பல பிறவிகளில் நாம் செய்த புண்ணியம், பாவம் இரண்டின் தொகுப்பையே கர்மா என்கிறோம்.

அவற்றின் பலன்களை நாம் எப்படி அனுபவிக்கிறோம் என்பதும் ஏற்கெனெவே விளக்கியபடி காலத்தின் கையில் உள்ளது. சில பலன்களை இந்த ஜென்மத்தில் உயிருடன் இருக்கும்போதே அனுபவிக்கிறோம், இன்னும் சிலவற்றை இறந்தபின் அனுபவிக்கிறோம். இதுவே சொர்க்கம், நரகம் என்ற நிலைகளின் அர்த்தம்.

Comments

Popular posts from this blog

அபிராமி அந்தாதி - உரை - அறிமுகம்

அபிராமி அந்தாதி - உரை: காப்பு

அபிராமி அந்தாதி: பின்னணி, வரலாறு