அபிராமி அந்தாதி பாடல் #5 - உரை
[மனக்கவலை மறைந்திட]
பொருந்திய முப்புரை செப்புரை செய்யும் புணர்முலையால்
வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி வார்சடையோன்
அருந்திய நஞ்சு அமுதாக்கிய அம்பிகை அம்புயமேல்
திருந்திய சுந்தரி அந்தரி பாதம் என் சென்னியதே. 5
வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி வார்சடையோன்
அருந்திய நஞ்சு அமுதாக்கிய அம்பிகை அம்புயமேல்
திருந்திய சுந்தரி அந்தரி பாதம் என் சென்னியதே. 5
புரை = உயர்வான, மேலான, மூத்த (புரை உயர்வு ஆகும் - தொல்காப்பியம் 2-8-4). முப்புரை = திரிபுரை, மும்மடங்கு மேலானவள் #626
செப்புரை: செப்புக் கிண்ணங்களை போன்ற புணர்முலை
புணர்முலையால் வருந்திய வஞ்சி மருங்குல்:
மருங்குல் = இடுப்பு. : முலை:ஸ்தன பாரங்கள். சிவபெருமானைக் கூடுவதால் அழுந்திய முலைகளால் வருந்திய இடுப்பை உடையவள்; வஞ்சிக் கொடி போன்றவள்.
வஞ்சிக்கொடி என்பது அமிர்தவல்லி எனப்படும் Tinospora cordifolia. இது சீந்தில் கொடி, ஆகாசவல்லி, அமிர்தவல்லி, சோமவல்லி, சாகாமூலி என்ற பல பெயர்களாலும் குறிப்பிடப்படுகின்றது. வல்லி என்றால் கொடி என்று அர்த்தம்.
![]() |
| அமிர்தவல்லி (Tinospora Cordifolia) |
பாடல் 100ல் 'குழையத் தழுவிய கொன்றை அந்தார் கமழ் கொங்கை வல்லி': சிவபெருமானைத் தழுவுவதால் அவர் அணிந்திருக்கும் கொன்றைத் தாரின் வாசனை அம்பாளுடைய ஸ்தன பாரங்களில் படிந்திருக்கும் என்றும், கொடி போன்றவள் என்றும் வருணிக்கிறார். அபிராமி அந்தாதியிலேயே பல பாடல்களில் அம்பாளின் அந்தரங்கமான பாகங்களை விரிவாக வருணிக்கிறார் அபிராம பட்டர்:
#33: குவிமுலை
#62: கொங்கைக் குறும்பைப் குறியிட்ட நாயகி
#93: முகையே முகிழ்முலை
#91: விரிசடையோன் புல்லிய மென்முலை
#85: வார்க் குங்கும முலை
#42: நல்லரவின் படங்கொண்ட அல்குல்: அரவு = பாம்பு; அல்குல் = பெண்குறி; படமெடுக்கும் நல்லபாம்பைப் போன்று தோற்றமளிக்கும் அல்குல் என்று அர்த்தம்.
"கொங்கை குடம் இரு கரியோ? கிரியோ? வஞ்சி கொடி இடை துடியோ? பிடியோ?
கொங்கு உற்று உயர் அல்குல் அரவோ? ரதமோ? ...... எனும் மாதர்" என்பார் அருணகிரி நாதர்.
- கொந்துத் தரு (பழநி) திருப்புகழ்:151
மார்பகங்களாகிய குடங்கள் இரண்டு யானைகளோ, மலைகளோ? வஞ்சிக் கொடி போன்ற இடுப்பு உடுக்கையோ, ஒரு பிடியில் அடங்குவதோ?
வாசனை கொண்டு உயர்ந்த பெண்குறி பாம்போ, ரதமோ என்று உவமை கூறத் தக்க (விலை)மாதர்கள், சிந்து எனப்படும் இசைப் பாடல்களை பயின்று நடனம் செய்கின்ற பாவியர்களாகிய வேசிகள் என்று வருணிக்கிறார் அவர்.
இந்தப் பாடலில் மட்டுமின்றி வேறு சில நூல்களிலும் (உதாரணமாக தேவி பாகவதம்) கடவுளர்களின் அந்தரங்கமான பாகங்களை வர்ணனை செய்தும் , 'ஆபாசத்தின் எல்லைக்கு அருகே' என்று சொல்லும் அளவுக்கு வருணனைகள், அவர்களுடைய ஊடல், கூடல் போன்ற விவரங்கள் உள்ளன, இது ஏன்? என்று நம்மில் பலர் வருத்தப் படுகிறோம்.
உயர்ந்த எண்ணங்களை, நல்ல பல விஷயங்களை விளக்கும் இந்த நூல்களில் நடுநடுவே இத்தகைய அருவருப்பான, விரும்பத் தகாத வருணனைகள் தேவையா? என்று (வெளியே சொல்லாவிட்டாலும்) பலர் மனதில் ஒரு ஆதங்கம் இருக்கவே செய்கிறது.
பிள்ளையாருக்கு யானைத் தலை, சிலருக்குப் பல தலைகள், பல கடவுள்களுக்கு நான்கு கைகள் (முருகனுக்குப் பன்னிரண்டு), கிட்டத்தட்ட எல்லோருக்குமே இரண்டு மனைவிகள், (கிருஷ்ணனுக்கு பல ஆயிரம்). இவர்களுக்கு இடையே உள்ள உறவு முறைகளோ பெருங் குழப்பம். இவர்களைப் பற்றிய புராணங்களில் உள்ள சம்பவங்களைப் பார்த்தால் திருடுவது, ஏமாற்றுவது, கொலை செய்வது, வரங்கள் தரும்போது 'நைசாக' சிலதைத் தவிர்த்து விட்டுப் பின்னர், அதை வைத்தே வரம் வாங்கிய பக்தனையே அழிப்பது என்று எங்கு பார்த்தாலும் அக்கிரமம், அநியாயம், அதர்மம் தான். இப்படிப்பட்ட அபத்தங்களைப் போய் ஆன்மிகம் என்று எப்படிச் சொல்லலாம்? என்று 'பகுத்தறிவு வாதிகள்" கேட்கிறார்கள்.
இதைப் பற்றிய கேள்விகளை, விவாதங்களைப் பார்க்கும் நம்முடைய குழந்தைகள் நம்மிடம் கேட்கும் கேள்விகளுக்கு முறையான, முழுமையான, அவர்கள் ஏற்கும்படியான விளக்கத்தை, பதில்களை சொல்லும் அளவுக்கு நமக்கு ஞானம் இல்லை. ஆகவே நம்மால் சொல்ல முடிவதில்லை.
"அதெல்லாம் அப்படித்தான், சொன்னா உனக்குப் புரியாது, வாயை மூடு" என்று அவர்களை அடக்கி விடுகிறோம்.
"இருக்கு. ஆனா, இல்ல!"
எங்கும் நிறைந்த பரம் பொருளை, இந்தப் பிரபஞ்சம் முழுமைக்கும் காரணமான இறைவனை, தங்களது உள்ளுணர்வால், மெய்ஞ்ஞான அனுபவத்தால் கண்டு மகிழ்ந்த நம் முன்னோர்கள், ஞானிகள் இவற்றை வெறும் வார்த்தைகளால் அறிவும் ஞானமும் இல்லாத நம்மைப் போன்றவர்களுக்கு எப்படிச் சொல்ல முடியும்?
உரு அன்று, அரு அன்று, உளது அன்று இலது அன்று என்பார் அருணகிரி நாதர் (கந்தர் அனுபூதி #13). அதே நூலில் "உருவாய் அருவாய் உளதாய் இலதாய்" என்று (#51) மீண்டும் அதையே சொல்வார்.
(முருகன்) "உருவம் இல்லாதவன். ஆனால் உருவம் இல்லாதவனும் அல்ல. கடவுள் என்ற பரம்பொருள் (இங்கே, இன்ன இடத்தில்) உள்ளது என்று சொல்ல முடியாது. கடவுள் இல்லை என்றும் சொல்ல முடியாது" என்பது இதன் அர்த்தம்.
"எண்ணில் ஒன்றும் இல்லா வெளியே" என்று இங்கே அபிராமி அந்தாதியின் 16ஆவது பாடலிலும் வரும்.
கடவுள் என்ற வார்த்தைக்கே 'கடந்து உள்ளிருப்பவன்' என்றுதான் அர்த்தம். அனைத்தையும் கடந்தவன் எப்படி உள்ளே இருக்க முடியும்?
இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே (சிவ புராணம் 70).
"எண்ணுதற்கு எட்டா எழில் ஆர்கழல் இறைஞ்சி,
விண் நிறைந்து மண் நிறைந்து மிக்காய், விளங்கு ஒளியாய்,
எண் இறந்து எல்லை" இல்லாதவன் என்பார் மாணிக்கவாசகர் (சிவ புராணம் 22-25).
"ஆக்கம் அளவு இறுதி இல்லாய்" என்று மீண்டும் வரும் (வரி எண் 41). "சக்தி அநந்தம், எல்லையற்றது, முடிவற்றது; அசையாமையில் அசைவு காட்டுவது...பொருளில்லாப் பொருளின் விளைவில்லா விளைவு" என்பார் மஹாகவி பாரதியார்.
கந்தர் அனுபூதியில் "அவ்வாறு அறிவார் அறிகின்றது அல்லால் எவ்வாறு ஒருவர்க்கு இசைவிப்பதுவே?" என்று கேட்கிறார் அருணகிரிநாதர் (#30). பரம்பொருளை அடுத்தவருக்குப் புரியும்படி எடுத்துச் சொல்வது எப்படி? என்று இதற்கு அர்த்தம்.
இங்கே அவர் பயன்படுத்தியுள்ள வார்த்தையைக் கூர்ந்து கவனிக்க வேண்டும். "எவ்வாறு ஒருவர்க்கு அறிவிப்பதுவே/தெரிவிப்பதுவே/உணர்விப்பதுவே என்பது போன்ற வேறு சொற்களைப் பயன்படுத்தினாலும் இலக்கணம், சந்தம் மாறாது. ஆனால் "எவ்வாறு ஒருவர்க்கு இசைவிப்பதுவே?" என்கிறார் அவர்.
இசைவிப்பது என்றால் இரண்டு பேர் ஒரே கருத்து உடையவர்களாக ஆவது, ஒப்புக் கொள்வது என்று மேலெழுந்த வாரியான superficial பொருள். ஆழமாகச் சிந்தித்துப் பார்த்தால் 'இசைவிப்பது' என்பது ஒரே அலைவரிசையில் Frequency இருப்பது என்று புரியும். வயலின், வீணை, கிதார் போன்ற தந்திக் கருவிகளில் இரண்டு கம்பிகள் ஒரே அலைவரிசையில் இணக்கமாக அதிரும்போது கிடைக்கும் ஒலியை ஒத்திசை (Harmony, resonance) என்பார்கள். "இசை" என்ற தமிழ் வார்த்தைக்கே இதுதான் பொருள்.
வட நாட்டு தந்திக் கருவியாகிய சித்தாரில் 17, 18 (சில வகைகளில் 21 அல்லது 23) தந்திகள் இருந்தாலும் முக்கியமாக மீட்டப்பட்டு ஒலியை உண்டாக்குவது bhaaj-dhar எனப்படும் 1,2 அல்லது 3 தந்திகள் தான். மற்ற எல்லாத் தந்திகளும் இந்த ஒத்திசையை எழுப்புவதற்குத் தான். (இவற்றை taraf dhaar என்கிறார்கள். நம் தென்னாட்டு 'சரஸ்வதி' வீணையிலும் சுண்டு விரலால் தாளத்திற்கு மீட்டப்படும் 3 தந்திகளும் இதற்காகத் தான்).
நம்முடைய மூளையில் நம் எண்ணங்கள், நினைவுகள், சிந்தனைகள் பதிவதும், நாம் அவற்றை மீண்டும் நினைவுப் படுத்திப் பேசுவதும் எழுதுவதும் மூளையில் உள்ள நியூரான் எனப்படும் செல்களில் நடக்கும் மின் அதிர்வுகளே என்பது நவீன விஞ்ஞானம்.
உங்களுடைய மூளையில் உள்ள நியூரான்களும் என்னுடைய மூளையில் உள்ள நியூரான்களும் ஒரே அலைவரிசையில் அதிர்கிறது, Harmony-யில் இருக்கிறது என்ற நிலை வருமானால், வார்த்தைகள் இல்லாமலே நாம் இருவரும் மற்றவர் நினைப்பதை அறிய முடியும். இதையே Telepathy என்கிறார்கள்.
அருணகிரிநாதர் இசைவிப்பது என்று சொல்வதும் இதைத்தான்.
வரையறைகளுக்கு அப்பாற்பட்ட கடவுளை, ஒரு சிறிய உலகத்துக்குள் சுழன்று வரும் நாம் எப்படிப் புரிந்து கொள்ள முடியும்? லலிதா சஹஸ்ரநாமத்தில் அம்பாளின் இந்தத் தன்மையை விளக்கும் பல திருநாமங்கள் உள்ளன:
#132 நிராதாரா: ஆதாரம், சார்பு எதுவும் இல்லாதவள். அவளுக்கு support எதுவும் தேவையில்லை. #147 நிராஸ்ரயா: ஆஸ்ரயம் என்றால் பாதுகாப்பு Shelter என்று பொருள். நிராஸ்ரயா என்றால் பாதுகாப்பு என்ற தேவை இல்லாதவள் என்று அர்த்தம் #133 நிரஞ்சனா: தளைகள், கட்டுப்பாடுகள் இல்லாதவள்
#137 நிராகாரா: வடிவம் இல்லாதவள்
#138 நிராகுலா: குலம் இல்லாதவள்
#139 நிர்க்குணா: குணங்கள் இல்லாதவள்; #142 நிஷ்காமா, #156 : ஆசைகள், விருப்பங்கள் இல்லாதவள்
#140 நிஷ்களா: பிரிவுகள்/பகுதிகள் இல்லாதவள்; #145 நிர்விகாரா: மாற்றம் இல்லாதவள்
#146 நிஷ்ப்ரபஞ்சா: இந்தப் பிரபஞ்சத்தையும் தாண்டி, #961 சர்வாதீதா: அதற்கு அப்பாலாய் இருப்பவள்; #960 லோகாதீதா: எல்லா உலகங்களையும் கடந்தவள்; #961 குணாதீதா: எல்லா வகை குணங்களுக்கும் அப்பாற்பட்டவள்.
#132 நிரந்தரா, #136 நித்யா, #143 நிருபப்லவா: அழிவில்லாதவள், நிரந்தரமானவள்
#152 நிஷ்காரணா: மூல காரணம் எதுவும் இல்லாதவள்; # 296 அனாதி நிதனா: ஆரம்பமும் (ஆதி) முடிவும் இல்லாதவள்
#135 நிர்மலா, #153 நிஷ்களங்கா: குறைகள், களங்கம் இல்லாதவள் #134 நிர்லேபா: செயல்களால் உண்டாகும் விகாரங்கள், குறைகள் இல்லாதவள் #148 நித்யசுத்தா: நிலையான, அழியாத தூய்மை உடையவள்.
#154 நிருபாதி: உபாதி இல்லாதவள். உபாதி என்றால் குறைகள், கட்டுப்பாடுகள், தடைகள் Condition, limitation, determinant.
#155 நிரீஸ்வரா: தனக்கு மேலே ஒரு தலைவன் இல்லாதவள்
வடிவம் இல்லாத, ஆதியும் அந்தமும் இல்லாத, எங்கும் நிறைந்த பரம்பொருளை நமக்குப் புரியவேண்டும் என்பதற்காகவே வருணனைகள், கதைகள், புராணங்கள் சொல்லப்பட்டன. இவற்றை வார்த்தைக்கு வார்த்தை அப்படியே நேரடியான அர்த்தம் (literal meaning) பண்ணிப் புரிந்து கொள்வது தவறு. இவையே இறுதியான உண்மை அல்ல.
அம்பாளுடைய இரு ஸ்தன பாரங்களும் முறையே பர ஞானம், அபர ஞானம் ஆகியவற்றைக் குறிக்கின்றன. நம்முடைய நூல்களில் பரவிக் கிடக்கும் symbolism என்பதற்கு இதை உதாரணமாகச் சொல்லலாம்.
பர ஞானம் என்றால் உலக விஷயங்களைப் பற்றிய அறிவு. இன்றைய நிலையில் 'விஞ்ஞானம்' என்று சொல்லலாம்.
அபர ஞானம் என்றால் உலகத்துக்கு அப்பாற்பட்ட ஆன்மீக விஷயங்களைப் பற்றிய அறிவு. 'மெய்ஞ்ஞானம்' என்று சொல்லலாம். லோகமாதாவான அம்பாளுடைய இரு ஸ்தன பாரங்களும் தருவது சாதாரண தாய்ப்பால் அல்ல, அது ஞானப்பால்.
இதனால் தான் 'அம்பாள் திருஞான சம்பந்தருக்கு "ஞானப்பால்" ஊட்டினாள்' என்று சொல்கிறோம். பாடல் #9இல் இதற்கான குறிப்பு உள்ளது.
"நாத விந்து கலாதீ நமோ நம" என்று பிரபல திருப்புகழ் (#170) பாடலில் வரும். கந்த சஷ்டிக் கவசத்தில் 'விந்து விந்து மயிலோன் விந்து' என்பதும் இதே தான்.
வட மொழியில் "பிந்து" (bindhu) என்பதைத் தமிழில் 'விந்து' என்று மருவி வருவதைப் பாலியல் சம்பந்தமானது என்று பலர் தவறாகப் புரிந்து கொள்கிறார்கள். இந்திய மொழிகள் பலவற்றில் வ (v) என்ற ஒலியும் 'ப' (b) என்ற ஒலியும் மாறி வரும். உதாரணமாக, தமிழில் வங்கம் என்பதை பெங்கால் என்கிறோம்.
நாலாயிர திவ்ய ப்ரபந்தத்தில் (முதல் திருமொழி), திருமங்கை ஆழ்வாரின் பாசுரம் ஒன்று வைணவர்களிடையே மட்டுமின்றி பொதுவாகவே மிகவும் பிரபலம்:
குலம் தரும்; செல்வம் தந்திடும்* அடியார் படு துயர் ஆயின எல்லாம்*
நிலம் தரம் செய்யும்; நீள் விசும்பு அருளும்* அருளொடு பெருநிலம் அளிக்கும்*
வலம் தரும்; மற்றும் தந்திடும்* பெற்ற தாயினும் ஆயின செய்யும்*
நலம் தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன்* நாராயணா என்னும் நாமம்.
இதில் மூன்றாவது வரியில் வலம் என்ற சொல் "பலம் தரும்" என்ற பொருளில் உள்ளது. ப என்ற ஒலி தமிழில் வ என்ற ஒலியாக மாறுவதற்கு இது இன்னுமொரு உதாரணம் ஆகும்.
இதே போலத்தான் பிந்து என்பது விந்து என்றானது.
பிந்து என்றால் புள்ளி, கருப்பொருள்,சிறுதுளி என்று அர்த்தம். (இதனால் தான் நெற்றியில் பொட்டு வைப்பதை ஹிந்தியில் bindhi என்கிறார்கள்). விதை என்பது இன்னொரு அர்த்தம். (வட மொழியில் பீஜம் (beeja) என்பதே தமிழில் 'வி' ஒலியுடன் விதை என்றானது)
அகாரம் உகாரம் மகாரம் எனப்படும் அ, உ,ம ஆகிய ஒலிகள் இணைந்து உருவாகும் ஓம் என்ற பிரணவத்தின் விரிவான விளக்கத்தில் இதைப் பின்னர் பார்க்கலாம்.
அம்பாளைப் பற்றிய வருணனைகளை இப்படிச் சரியாகப் புரிந்து கொண்டால் ஆபாசம், அருவருப்பு போன்ற தேவையற்ற எண்ணங்கள், சிந்தனைக்கே இடமில்லை.
கணவன் மனைவி ஒற்றுமையாக, மகிழ்ச்சியாக வாழ வழிகாட்டும் நம்முடைய சாத்திரங்கள் இதை பற்றிச் சொல்லும்போது தாம்பத்திய உறவில் (தனிமையில் இருக்கும்போது) மனைவிக்குக் கணவன் அடி பணிந்து (தாஸன் என்ற 'பா'வத்தில்) நடக்க வேண்டும் என்றே சொல்கின்றன.
[7ஆவது பாடலில் "சிவபெருமான் துதிக்கும் சேவடி உடையவளே" என்று சொல்வது இந்த அர்த்தத்தில் தான்.]
மனைவியைத் தவிர உலகில் உள்ள மற்ற எல்லாப் பெண்களையும் தாயாகப் பார்க்க வேண்டும், மதிக்க வேண்டும் என்பதை நம்முடைய முன்னோர்கள் திரும்பத் திரும்ப வலியுறுத்திச் சொல்கின்றனர். குறிப்பாக, சக்தி வழிபாட்டில் (ஸ்ரீ வித்யா உபாஸனையில்) இது அத்தியாவசியம் ஆகும்.
இன்னும் சொல்லப் போனால், பெண்களுடைய அங்கங்களை, உடல் உறுப்புக்களை எந்த வித ஆபாச உணர்ச்சியும் இன்றி, காமக்கண் கொண்டு விகாரமாகப் பார்க்காமல், அவற்றை மிகவும் இயல்பான ஒரு சாதாரண விஷயமாக, தாய்மை என்ற மிக உயர்ந்த நிலையின் ஒரு பகுதியாக மட்டுமே, இயற்கையின்/கடவுளின் ஒரு பகுதியாகப் பார்ப்பதே நம்முடைய கலாச்சாரம், மரபு. (சுமார் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட நவீன கல்வி முறை எனப்படும் "Modern Education" வருவதற்கு முன்பு இதில் எந்தப் பிரச்சினையும் ஏற்படவில்லை.)
கோவில்களில் உள்ள சிற்பங்களில் பெண்கள் ஏன் அரைகுறை ஆடையோடு இருக்கிறார்கள் என்ற கேள்விக்கும் மேலே சொன்ன அதே விஷயம்தான் சரியான பதில்.
மனோன்மணி:
தமிழில் மனோன்மணி என்று சொன்னாலும் வட மொழியிலும் (குறிப்பாக) லலிதா ஸஹஸ்ர நாமத்தில் 207ஆவது திருநாமம் மனோன்மனீ (मनोन्मनी) என்றே உள்ளது.
ஸம்ஸ்க்ருதத்தில் 'உன்மன' என்றால் "ஏக்கத்தோடு இருப்பது" என்று அர்த்தம். யோகசாஸ்திரத்தின்படி த்யானத்தில் ஆழ்ந்து மிகவும் உயர்வான நிலையில் "தான்" என்ற உணர்வு முழுவதுமாக நீங்கி, ஆத்மாவை பரம்பொருளுடன் ஐக்கியப் படுத்தும் ஏக்கம் என்பது மனோன்மனீ என்பதன் விரிவான பொருள். இந்த நிலையைப் பக்தர்களுக்கு அருள்வதாலும் அம்பாளுக்கு இந்தப் பெயர்.
அம்புயம் = அம்புஜம் (சம்ஸ்கிருதத்தில்), தாமரை. பாடல் #2 உரையில் ஏற்கெனவே பார்த்தபடி தாமரை மலர் என்பது படைப்பாற்றலின் குறியீடு (symbol for creativity) ஆகும் .
அம்புயமேல் திருந்திய சுந்தரி: லலிதா சஹஸ்ரநாமத்தில் #278வது திருநாமம்: பத்மாஸனா; தாமரை மலரின் மேல் வீற்று இருப்பவள் என்று அர்த்தம்.
அருந்திய நஞ்சு அமுதாக்கிய அம்பிகை:
நஞ்சு: விஷம்.
அம்ருதம் பெறுவதற்காக, தேவர்களும் அசுரர்களும் மந்தார மலையை மத்தாக வைத்து, வாசுகி என்ற நாகத்தைக் கயிறாகக் கொண்டு பாற்கடலைக் கடைந்தபோது முதலில் ஆலஹாலம் என்ற கொடிய விஷம் வெளிப்பட்டது. அதன் வெம்மை தாங்காமல் எல்லோரும் துன்பப்பட்ட போது, சிவபெருமான் அதை உட்கொண்டார். உடனே அம்பாள் அவர் கழுத்தை இறுக்கிப் பிடித்து, அந்த விஷம் மேற்கொண்டு கீழே இறங்காதபடிச் செய்தாள்.
அந்த விஷம் சிவனின் கழுத்திலேயே தங்கி விட்டதால் அவருடைய கழுத்து நீல நிறமானது. அதனாலேயே சிவபெருமானுக்கு "நீல கண்டன்" என்று ஒரு பெயர். கண்டம் (kanta) என்றால் கழுத்து. [ஸ்ரீகாந்த் Srikanth என்ற பிரபலமான பெயரில் பலர் இருக்கிறார்கள். ஸ்ரீ என்பதன் பல அர்த்தங்களில் ஒன்று விஷம் என்பதாகும். நீல கண்டன் = ஸ்ரீ கண்டன் என்பதே சுருங்கி ஸ்ரீகாந்த் ஆகியது.
லலிதா சஹஸ்ர நாமத்தில் 392ஆவது திருநாமம் "ஸ்ரீ கண்டார்த்த சரீரிணி": ஸ்ரீ கண்ட(சிவன்) + அர்த்த(பாதி) + சரீரிணி (தேகம், உடல்) என்றால் "சிவனுடைய பாதி உடலைக் கொண்டவள்" என்று பொருள். Ardha என்றால் பாதி, artha என்றால் செல்வம், பொருள். தமிழில் சஹஸ்ர நாமம் படிப்பவர்கள் கவனமாக உச்சரிக்கவும்.
[இந்தக் கதையில் விஷம் வெளிப்பட்ட பின்னர் பாற்கடலில் இருந்து மஹாலக்ஷ்மி, சந்திரன், காமதேனு, தன்வந்திரி என்று பலரும் வெளிப்பட்டனர். அதனால் விஷத்துக்கும் இந்தப் பெயர்].
இந்தக் கதை பல பேருக்கு ஏற்கெனெவே தெரிந்து இருக்கும். இந்தக் கதையின் விரிவான விளக்கத்தை 13ஆவது பாடலின் உரையில் பார்க்கலாம்.
அம்பாளின் கை பட்டதால் தான் அந்தக் கொடிய விஷம் செயலிழந்து போனது மட்டுமின்றி அந்த விஷமே அம்ருதமாக மாறி விட்டது என்கிறார் அபிராம பட்டர் .
அந்தரி: அந்தரம் என்றால் ஆகாயம். அந்தரி என்றால் ஆகாயத்தில் இருப்பவள் என்று அர்த்தம். குறிப்பாக "பராகாச வடிவை உடையவள்" என்பதாகும்.
லலிதா சஹஸ்ர நாமத்தில் #782ஆவது திருநாமம் "பராகாசா" (பர + ஆகாசா).
பர = சிறந்தது, மேலானது. பராகாஸா என்றால் சிறந்ததான, மேலான ஆகாசத்தில் இருப்பவள் என்று பொருள்.
பஞ்ச பூதங்களில் ஒன்றான ஆகாசம் அல்ல இது.
இதயத்தில் சூக்ஷ்மமாக உள்ள சூரிய சந்திரர்களுக்கு நடுவே உள்ள 'வெளி' யில் அக்னி இருக்கிறது. அதன் சிகரத்தின் மேல் உள்ள ஆகாசத்திற்க்கு 'பராகாசம்' என்று பெயர். அதன் வடிவாக இருப்பதால் அம்பாளுக்கு இந்தப் பெயர்.
#609ஆவது திருநாமம் "தஹராகாச ரூபிணி": மேலே சொன்னபடி இதயத்தில் சூக்ஷ்மமாக உள்ள 'வெளி' (space) தஹராகாசம் எனப்படும். முழுமையாக அம்பாளின் அருளைப் பெற்ற பக்தர்களின் இதயத்தில் இருப்பதால் இந்தப் பெயர்.
8ஆவது பாடலில் சுந்தரி, அந்தரி ஆகிய இந்தப் பெயர்கள் இரண்டும் மீண்டும் வரும்.
பாதம் என் சென்னியதே:
பாடல் 4ல் பார்த்தபடி சென்னி = தலை.

Comments
Post a Comment