கல்லைக் கண்டா நாயைக் காணோம்

 கல்லைக் கண்டா நாயைக்  காணோம்

"கல்லைக் கண்டா நாயைக்  காணோம், நாயைக் கண்டா கல்லைக் காணோம்" என்று, நம்மில் பலருக்கும் தெரிந்த பழமொழி/சொலவடை ஒன்று உண்டு.

தெருவில் சுற்றித் திரியும் நாயைப் பார்த்ததும் அதை அடித்து விரட்டுவதற்காக அவசரமாகத் தேடும்போது சட்டென்று உடனே கல் எதுவும் கிடைக்காது, கல்லைத் தேடிக் கண்டுபிடித்து எடுப்பதற்குள் நாய் ஓடி விடும்" என்ற தவறான அர்த்தத்தில் பலர் இதைப் புரிந்துகொண்டுள்ளனர்.

இந்தப் பழமொழி உண்மையில்  உருவ வழிபாட்டின் அடிப்படையை விளக்குகிறது.

இதை ஒரு சின்னக் கதை சொல்லி விளக்குகிறார் காஞ்சி மஹா பெரியவர் (தெய்வத்தின் குரல்):

மரத்தால் செய்யப்பட்ட யானை பொம்மையை ஒரு சின்னக் குழந்தை பார்த்தால் "இது யானை" என்று சொல்லும். மரம் அதன் கண்ணுக்குத் தெரியாது. 

அதே பொம்மையை மரவேலை, மரங்களைப் பற்றி அனுபவம் உள்ள தச்சர் பார்த்தால் 'இது இன்ன மரம்' என்று சொல்வார்.அவர் கண்ணுக்கு யானை தெரியாது.


மரத்தை மறைத்தது மாமத யானை;
மரத்தில் மறைந்தது மாமத யானை;
பரத்தை மறைத்தன பார்முதல் பூதம்;
பரத்தில் மறைந்தன பார்முதல் பூதமே.
- திருமூலர்.#2290. எட்டாம் தந்திரம் பராவத்தை - பரா(பரை, பரம் - சக்தி) + அவத்தை(நிலை) என்ற தலைப்பில் இந்தப் பாடல் வரும். 

ஆன்மாவுடன் சக்தியின் நிலை எப்படிப்பட்டது என்பதனை விளக்கும் பகுதி. திருமூலரின் முதல் பாடலில், "ஒன்று அவன்தானே; இரண்டு அவன் இன்னருள்;" என்பார். ஒருவனே இறைவன், அவனே சிவமாகவும் சக்தியாகவும் இரண்டாக உள்ளான் அதில் சக்தியே இரண்டு அருளான மறக்கருணையும் அறக்கருணையும் செய்கிறது.

குறிப்பு:சைவ சித்தாந்தத்தில் மாயை தனியான பொருள். (குயவன் சிவனென்றால் சுழலும் சக்கரம் சக்தி. நீர் கலந்த களிமண்: பஞ்சபூதங்கள்.  பானை,சட்டி, பொம்மை போன்ற வடிவங்கள்: மாயை).

சக்தியின் மறக்கருணை நிலை: உயிர்களின் உலக வாழ்க்கைக்காக மாயையை இயக்குகிறது; இந்நிலையில் அறக்கருணையை காட்டாமல். சக்தி மாயையை இயக்குவதால் மதயானையுடன் இயக்கநிலைக்கு உவமைப் படுத்தப்பட்டது.

சக்தியின் அறக்கருணை நிலை: உயிர்களை சிவத்திடம் அழைத்துச் செல்லும் போது மாயையை இயக்காமல் அறக்கருணை செய்யும். சக்தி இயங்காமல் உள்ளதால் மரத்துடன் அமைதி நிலைக்கு உவமைப்படுத்தப்பட்டது.

பரத்தை மறைத்தது ஐந்து பூதங்களும்: இது மறக்கருணை. சக்தியில் ஒடுங்கியது வெளி முதலான பஞ்சபூதம், அந்த சக்தி பரத்தில் ஒடுங்கி, உயிர்களுக்கு பரத்தை காட்டியது அறக்கருணை.

இந்த உலகத்தை Materialistic ஆக, பஞ்ச பூதங்களால் ஆன கலவையாகப் பார்த்தால் கடவுள் நம் கண்ணுக்குத் தெரிய மாட்டார். அனைத்தையும் கடவுளாகப் பார்க்கப் பழகிவிட்டால் உலகத்தில் உள்ள பேதங்கள், வித்தியாசங்கள் மறைந்து விடும்.

இதையே கவியரசர் கண்ணதாசன், ஒரு திரைப்பட பாடலில் மிகவும் எளிமையாகக் கூறி இருப்பார்:
தெய்வம் என்றால் அது தெய்வம்,
அது சிலை என்றால் வெறும் சிலை தான்;
உண்டென்றால் அது உண்டு,
இல்லையென்றால் அது இல்லை.
(படம்: பார்த்தால் பசி தீரும். பாடல்: உள்ளம் என்பது ஆமை)

Comments

Popular posts from this blog

அபிராமி அந்தாதி - உரை - அறிமுகம்

அபிராமி அந்தாதி - உரை: காப்பு

அபிராமி அந்தாதி: பின்னணி, வரலாறு