அபிராமி அந்தாதி பாடல் #3 - உரை
சம்சார பந்தம் நீங்க
செறிந்தேன் உனது திருவடிக்கே. திருவே! வெருவிப்
பிரிந்தேன் நின் அன்பர் பெருமை எண்ணாத கரும நெஞ்சால்
மறிந்தே விழும் நரகுக்கு உறவாய மனிதரையே.
மறை: வேதம். நான்மறை என்றால் நான்கு வேதங்கள் என்று அர்த்தம். மிகவும் நுணுக்கமான ஆன்மீக விஷயங்களை, வெளிப்படையாக இல்லாமல் சூசகமாக, மறைமுகமாக, உருவகங்களையும் (metaphor) குறியீடுகளையும் (symbolism) கொண்டு விளக்குவதால் இந்தப் பெயர். இதனால் தான் "எழுதா மறை", "எவரும் அறியா மறை" என்கிறார் அபிராம பட்டர்.
[Vedas are the ultimate knowledge/philosophy explained using metaphors/symbols with hidden meanings.]
ஆங்கிலத்திலும் மற்ற மொழிகளிலும் நமது வேதங்களைப் பற்றி எழுதப்பட்டுள்ள இடங்களில், இவை இறைவனைத் துதிக்கும் பாடல்களின் தொகுப்பு, தொகுதி ("The Vedas are a collection of sacred hymns") என்று இந்தியவியல் (Indology) அறிஞர்கள் கூறுகின்றனர்.
"இயற்கையைக் கண்டு பயந்த, வியந்த பண்டைய இந்தியர்கள், அந்த இயற்கை சக்திகளை வெவ்வேறு தெய்வங்களாக, கடவுள்களாகக் கற்பனை செய்து அவர்களைப் புகழ்ந்தும், தங்கள் பிரார்த்தனைகளை நிறைவேற்றி வைக்கக் கோரியும் வழிபாடு செய்யும் துதிப் பாடல்களின் தொகுப்பு வேதம்" என்றும், இந்தப் பாடல்கள் பல்வேறு காலக் கட்டங்களில் எழுதப்பட்டன என்றும் கூறுகின்றனர்.
இப்படிப்பட்ட ஒரு பொய்யான பிம்பத்தை உருவாக்கி, "வேதங்கள் என்றால் என்ன" என்று இந்தியர்கள் கூடத் தெரிந்து கொள்ளாமல் குழப்பப் படுவது, கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக நடந்து வரும் மிகப் பெரிய மோசடியாகும்.
மேக்ஸ் முல்லர் என்ற ஜெர்மனி நாட்டு 'அறிஞர்', 19ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் வாழ்ந்தவர்.
இவரது மேற்பார்வையில் "கீழை நாகரீகங்களின் புனித நூல்கள்" (The Sacred Books of the East) என்று 50 தொகுதிகள் (volumes) கொண்ட புத்தகங்களைப் பதிப்பித்தார். உலகப் புகழ் பெற்ற ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழக பதிப்பகம் (OUP: Oxford University Press) வெளியிட்ட இந்த 50 தொகுதிகளில் 21 நமது ஹிந்து மதத்தைப் பற்றியதாகும். இதில் வேதங்கள், உபநிஷத்துக்கள், பகவத் கீதை, தர்ம சாஸ்திரங்கள், மனு நீதி, ஹிந்துக்களின் சட்டங்கள், அன்றாட நெறிமுறைகளைச் சொல்லும் க்ருஹ்ய சூத்திரங்கள், ஆதி சங்கரர், ராமானுஜர் போன்றவர்கள் எழுதிய உரைகள் (பாஷ்யங்கள்) ஆகிய அனைத்தும் அடங்கும்.
இதை இங்கே உதாரணமாகக் காட்டுவதற்குக் காரணம், இந்தியாவின் புனித நூல்களை இவ்வளவு விரிவாக ஆய்வு செய்து மொழிபெயர்த்த மேக்ஸ் முல்லர் ஒரு முறை கூட இந்தியாவில் காலடி வைத்தது இல்லை!
இவர்கள் தான் "நரகுக்கு உறவாய மனிதர்"!
வேத பாட சாலையில் சிறு வயதிலேயே சேர்ந்து பல ஆண்டுகள் வேத அத்யயனம் செய்வது நம்மில் பலருக்கு இயலாத காரியம். என்றாலும் நம்முடைய வேதங்கள், உபநிஷத்துக்களைப் பற்றி நமக்குத் தெரிந்த மொழியில் நம்முடைய ஆச்சார்யர்கள்/மகான்கள் எழுதியுள்ள ஒரு சில புத்தகங்களைப் படிப்பது மிகவும் முக்கியம்.
வேதங்கள் சொல்வது என்ன?
உண்மையில் நம் வேதங்கள் சொல்வது என்ன? அவற்றை எழுதியது யார்? அவற்றில் உள்ள விஷயங்கள் எதைப் பற்றியவை?
சுருக்கமாகச் சொல்கிறேன். காஸ்மாலஜி (Cosmology), அதாவது இந்தப் பிரபஞ்சம் தோன்றிய விதம், அதன் கூறுகள் (parts); ஆரம்பம் முதல் இறுதி வரை அதன் பரிணாம வளர்ச்சி (Evolution), அதில் உள்ள பல்வேறு விதமான சக்திகள் (Cosmic forces), அவற்றின் குணங்கள், நமக்கும் இந்தப் பிரபஞ்சத்துக்கும் என்ன தொடர்பு (Cosmic connection), இவற்றின் பின்னணியில் உள்ள காரண-காரியங்கள் (causes and effects), மனித வாழ்வின் நோக்கம்/குறிக்கோள் என்ன? நாம் எதற்காகப் பிறந்தோம்? காலம் என்றால் என்ன, அதன் இயல்பு என்ன? போன்ற மிகவும் ஆழமான, சிக்கலான கேள்விகளையும் அதற்கான விளக்கங்களையும் நம் வேதங்கள் சொல்கின்றன.
சாதாரண மனிதர்களுக்கு இவற்றைப் புரிந்து கொள்வது மிகவும் கடினம் (complex) என்பதால் பல விஷயங்கள் மறைமுகமாகவும் (symbolism with hidden meaning), உருவகங்கள், உவமைகள், உதாரணங்கள் (metaphors, similes and allegories) ஆகியவற்றின் மூலம் இதை எல்லாம் விளக்கி உள்ளனர். பல கருத்துக்களுக்கு மனித வடிவம் கொடுத்தும், கதைகளாகவும் இந்த விஷயங்களை சொல்லி இருக்கிறார்கள். ஆங்கிலத்தில் இதை anthropomorphism என்று சொல்வர். சொர்க்கமும் நரகமும் பற்றிய பதிவில் வேதத்தில் சூரியன், யமன் ஆகிய குறியீடுகளின் அர்த்தத்தை விரிவாகப் படிக்கலாம். அது ஒரு உதாரணம்.
இன்னார்தான் வேதங்களை இயற்றினார், எழுதினார் என்று யாரையும் குறிப்பிட்டுச் சொல்லமுடியாது. அதனால் தான் வேதங்களை 'அபௌருஷேய' என்கிறார்கள். (அ + புருஷ) மனிதர்களிடம் இருந்து வந்தவை அல்ல என்று இதற்கு அர்த்தம்.
வேத மந்த்ரங்களை இயற்றிய ரிஷிகள் அவற்றைத் தாம் "எழுத"வில்லை என்றும் தான் ஒரு "திருஷ்டா", அதாவது இந்த மந்த்ரத்தை "பார்த்தவர்" என்றே தங்களைப் பற்றிச் சொல்லிக் கொள்கின்றனர். தவ வலிமையால் கிடைத்த உள்ளுணர்வு (Intuition), ஞானத்தின் மூலம் இந்த மந்த்ரங்கள் தாமே வெளிப்பட்டன என்றே அவர்கள் அனைவரும் சொல்கின்றனர்.
இன்னும் சொல்லப்போனால் மற்ற மதங்களைப் போல ஒரு குறிப்பிட்ட நபர் உருவாக்கியது (founder) என்று ஹிந்து மதத்தைச் சொல்ல முடியாது. நம்முடைய மதத்துக்குப் பெயரே கிடையாது. ஹிந்து என்பது சில நூற்றாண்டுகளுக்கு முன்னால் நம் மீது படை எடுத்த பாரசீகர்கள் (Persians) நம் நாட்டுக்கு வைத்த பெயர். 17-18ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்கள் இங்கே வந்தபோது நம் நாட்டில் உள்ள விதவிதமான சமயங்கள், வழிபாட்டு முறைகள் அனைத்தையும் குறிக்கும் ஒரே வார்த்தையாக, பொதுச் சொல்லாக வைத்த பெயர் தான் "ஹிந்து மதம்" (Hinduism) என்பது.
நேரடியாகச் சொல்லாமல் மறைமுகமாக, ரகசியமான குறியீடுகள், உருவகங்களைக் கொண்டு (hidden meanings/metaphors/symbols) ஏன் சொல்லவேண்டும்?
அதற்குப் பல காரணங்கள் உள்ளன.
1. எழுதாமல், எழுதி வைக்காமல் நினைவில் வைத்து ஓதி (அத்யயனம் செய்து) உணர வேண்டிய அறிவு இது. நமக்குப் பரிச்சயமான பாட புத்தகங்களைப் போல வெறும் விஷய ஞானத்தை மட்டுமே தரும் அறிவு அல்ல இது.
வேத மந்த்ரங்களுக்கு அர்த்தம் மட்டுமின்றி, அவற்றின் ஒலிக்கு 'வாக்' (தமிழில் 'வாக்கு') எனப்படும் விசேஷ சக்தி உண்டு என்பதால்தான் அவை மந்த்ரங்கள் எனப்பட்டன.
2. இப்படி ஞாபகம் வைத்து அத்யயனம் (learning by oral tradition) செய்ய வேண்டும் என்றால் அவை சுருக்கமாக (condensed) இருந்தால் தான் முடியும். அப்படிச் சுருக்கமாகச் சொல்லும்போது ஒரே சொல்லுக்கு பல அர்த்தங்கள் வருவது தவிர்க்க முடியாது (meaning will vary with context).
வேதங்களை எல்லோரும் படிக்கலாமா?
"ஒரு குறிப்பிட்ட ஜாதியினர் மட்டும் தான் வேதங்களைப் படிக்க வேண்டும்" என்பது நம் நாட்டில் பரவியுள்ள, உள்நோக்கத்துடன் பொய்யாகப் பரப்பப்பட்ட பொய், கட்டுக்கதை.
ஏற்கெனவே மேலே குறிப்பிட்டபடி வேதங்களை 'புத்தகங்களைப் படித்துப்' புரிந்துகொள்ள முடியாது. பள்ளி, கல்லூரியில் நாம் படித்த/படிக்கும் பாட புத்தகங்களைப் போல படித்து அதன் அர்த்தத்தைத் தெரிந்து கொள்ள முடியாது. எழுத்து வடிவங்கள் தோன்றுவதற்கு பல நூற்றாண்டுகள் முன்னர் காதால் கேட்டு, தினமும் ஓதி, நினைவில் வைத்து அறியும் கல்வி முறை இருந்த கால கட்டத்தில் அந்தக் கல்வி முறைக்காக பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட நுட்பங்கள் நிறைந்தவை இந்த நூல்கள்.
ஆனால் இன்றைய நவீன யுகத்தில், எல்லா அறிவும் புத்தகங்களில் இருந்தே பெறப்படும் காலத்தில், புத்தகங்களைப் பார்த்து, அவற்றைப் படித்துத் தான் வேதங்களை அறியும் நிலையில் நாம் இருக்கிறோம். ஆகவே, இன்றைய சூழ்நிலையில், யார் வேண்டுமானாலும் புத்தகங்களைப் படித்து அவற்றை தெரிந்து கொள்ளலாம்.
அதன் மூலம் முழுமையான ஞானம் கிடைக்குமா? என்று கேட்டால் 'சந்தேகம் தான், மேலோட்டமாகப் புரியுமே தவிர உண்மை அறிவு கிடைக்காது' என்பதே என் பதில்.
அறிந்தேன் எவரும் அறியா மறையை: பலரும் அறியாத மறைமுகமான வேதங்களை நான் அறிந்தேன் என்கிறார் பட்டர். இவருக்கு மட்டும் இது எப்படி சாத்தியம்? வேதங்களின் இறுதியான முடிவு, கருத்து, ஆதாரம் அம்பாள் தான், அவளை முறையாக வழிபாடு செய்து இந்த உண்மையைப் புரிந்து கொண்டேன் என்று இதற்கு அர்த்தம்.
செறிந்தேன் உனது திருவடிக்கே:
செறிதல்: புகல் (தஞ்சம்) அடைதல். இடைவிடாமல் த்யானிப்பது. சக்தி வழிபாட்டில் அம்பாளின் திருவடிகளுக்கு மிகவும் சிறப்பான, உயர்வான இடம் உண்டு. அதனால் தான் கோவிலில் அம்பாளுக்குத் தீபாராதனை காட்டும்போது, முகத்தின் அருகிலும் பாதங்களின் அருகில் விசேஷமாக, நிறுத்தி, நிதானமாகக் காட்டுவார்கள்.
அபிராமி அந்தாதியில் பல இடங்களில் அம்பாளுடைய திருவடிகளை வர்ணிக்கிறார் பட்டர்.
#6, 18: பொன் திருவடித் தாமரை, பொற்பாதம்
#8, 10: மலர்த்தாள்
#11: சரணாரவிந்தம்
#12: பாதாம்புயம், சரணாம்புயம்
#14, 15: தண்ணளி
#32: பாதம் எனும் வாசக் கமலம்
திருவே: லலிதா சஹஸ்ரநாமத்தில் 885ஆவது திருநாமம்: மஹாலக்ஷ்மி, திரு என்றால் செல்வம். திருமகள் எனப்படும் மஹாலக்ஷ்மி, செல்வத்தை வழங்குபவள் என்பதால் இந்தப் பெயர்.
வடமொழியில் உள்ள ஸ்ரீ என்பதற்கு மாற்றாக தமிழில் "திரு"/ "திருவாளர்" என்றும் "திருமதி" என்றும் பெயருக்கு முன்னால் அடைமொழியாகப் போடுவது இதனால் தான்.
ஆனால் திரு என்று சொல்வது த்ரிபுரசுந்தரியைத் தான் (மஹாலக்ஷ்மியை அல்ல) என்கிறார் காஞ்சி மஹா பெரியவர். அம்பாள் வழிபாட்டுக்குப் பெயர் 'ஸ்ரீ வித்யா'. அம்பாள் இருப்பது 'ஸ்ரீ புரம்'. அம்பாளின் யந்த்ரத்துக்குப் பெயர் 'ஸ்ரீ சக்ரம்'. சஹஸ்ர நாமத்தில் முதல் திருநாமம் 'ஸ்ரீ மாதா'. ஆகவே ஸ்ரீ என்பது அம்பாளையே குறிக்கும் என்கிறார் அவர். (தெய்வத்தின் குரல் ஆறாம் பாகம்).
வெருவி: அச்சம், பயம்: வெருவுதல்(பெ) அஞ்சுதல்; (வெறியாட் டிடத்து வெருவின்கண்ணும் (தொல்காப்பியம் . பொ. 111).
ஒரு சில மூலநூல் பிரதிகளில் பிறிந்தேன் என்றே உள்ளது. "எதுகை பற்றி இடையின ரகரம் வல்லினமாயிற்று" என்கிறார் கி. வா. ஜ. (ர: இடையினம்; ற: வல்லினம்).
கரும நெஞ்சால்: கருமம்= கர்மம், செயல், வினைப்பயன் (see தொல். 1120:1). இடைவிடாமல் ஏதாவது ஒன்றைப் பற்றி நினைத்தபடி/செயல்பட்டபடி இருப்பதால் 'கரும நெஞ்சு' என்கிறார். நாம் செய்த நல்வினை/தீவினை அடிப்படையில் தான் நம் எண்ணங்களும் அமையும். அந்த எண்ணங்களைப் பொறுத்தே நம் வாழ்க்கையும் அமையும். "மனம் போல வாழ்வு" என்பது பழமொழி. ஆகவே 'கரும நெஞ்சு' என்றார். இங்கே முக்கியமாகத் தீய செயல்களை/எண்ணங்களைக் குறிக்கும்.
நின் அன்பர்: சிவபெருமான். அபிராமியின் அடியவர்கள், அன்பர்கள் என்றாலும் பொருந்தும்.
நரகு = நரகம், துர்க்கதி. உயிர்கள் தீவினையின் பயனை அனுபவிக்கும் நிலை, இடம். தீஉழி : நரகம். குறள் எண் :168, 1159
உடம்பில் இருந்து நீங்கிய உயிர்களின் ஆன்மா இன்பத்தையும் துன்பத்தையும் உணர்வு நிலையில் (consciousness) அனுபவிக்கும் இரு விதமான நிலைமைகளே (states) சொர்க்கமும் நரகமும் என்பதை விரிவாக தனியே ஒரு பதிவில் விளக்கி இருக்கிறேன்.
சிவபெருமானின்/உன் அடியவர்களின் பெருமையை உணராத, (தீ)வினைகளால் இறுகிய நெஞ்சை உடைய மனிதர்கள், நரகத்தில் உழலப் போகும் மனிதர்களைக் கண்டு அஞ்சி அவர்களைப் பிரிந்தேன் என்கிறார்.

Comments
Post a Comment